துபாய் கோர விபத்தில் 12 இந்தியர்கள் உயிரிழந்த விவகாரம்... ஒரே மாதத்தில் தீர்ப்பு வெளியானது..!
துபாயில் பேருந்தில் விபத்தில் 12 இந்தியர்கள் உள்பட 17 பேர் உயிரிழப்பு காரணமாக இருந்த பேருந்து ஓட்டுநருக்கு ஒரு மாதத்தில் விசாரணை நடத்தி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
துபாயில் பேருந்தில் விபத்தில் 12 இந்தியர்கள் உள்பட 17 பேர் உயிரிழப்பு காரணமாக இருந்த பேருந்து ஓட்டுநருக்கு ஒரு மாதத்தில் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஓமனில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடிவிட்டு கடந்த ஜூன் மாதம் 6-ம் தேதி துபாய் நோக்கி தனியார் பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, பாதை மாறி மெட்ரோ ரயில் ஸ்டேஷனுக்கு செல்லும் பாதையில் வேகமாக சென்றது. அது பேருந்துக்கான பாதை அல்ல. கார்கள் மட்டுமே செல்ல முடியும். இதனால் கனரக வாகனங்கள் செல்வதை தடுக்கும் விதமாக அமைக்கப்பட்டிருந்த தடுப்பில், வேகமாக சென்ற பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 இந்தியர்கள் உள்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வந்த துபாய் போக்குவரத்து நீதிமன்றம் ஒரு மாத விசாரணைக்கு பின் தீர்ப்பு வழங்கி உள்ளது. விபத்து நடந்த பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் முகமது அலி தமாமி (54) மீது தவறு இருப்பதை உறுதி செய்த நீதிமன்றம் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
மேலும் சிறை தண்டனை முடிந்ததும், அவரது சொந்த நாடான ஓமனுக்கு அவர் நாடு கடத்தப்படுவார் என நீதிமன்றம் கூறியுள்ளது. துபாய் நிர்வாகத்துக்கு 13 ஆயிரம் யு.எஸ். டாலரும், உயிரிழந்த குடும்பத்துக்கு 92,500 யு.எஸ். டாலரும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தால் சுமார் பல ஆண்டுகள் விசாரித்து தீர்ப்பு வழங்கப்படுகிறது. ஆனால், விபத்து நடந்த 1 மாதத்தில் துபாய் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடதக்கது