அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், கடந்த 2005-ம் ஆண்டு பெண்கள் குறித்து ஆபாசமாகப் பேசியவீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், டொனால்ட் டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
பெண்கள் குறித்து மிகவும் ஆபாசமாகவும், கீழ்தரமாகவும் டிரம்ப் பேசிய இந்த வீடியோவை ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளேடு வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆபாசப்பேச்சு
தொழிலதிபரும், குடியரசுக்கட்சியின் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் அடிக்கடி அழகிப்போட்டிகள் நடத்தி, அதை தனக்கு சொந்தமானசேனல்களில் ஒளிபரப்புவது வழக்கம்.
அதுபோல், கடந்த 2005-ம் ஆண்டு நடந்த அழகிப் போட்டியில், ஸ்காட்டி நெல் ஹூகேஸ் என்ற பெண் குறித்து டிரம்ப் மிகவும் அருவருக்கத் தக்க வகையில், மிகவும் ஆபாசமாக கருத்துக்களை நிகழ்ச்சி தொகுப்பாளர் பில்லி புஷ்சிடம் பகிர்ந்து கொண்டார்.
டிரம்ப்பின் கோட்டில் அணிந்திருந்த மைக்ரோபோனில் இருந்து ஒட்டுக்கேட்டு இதை அவரின் அதிருப்தியாளர்கள் பதிவு செய்தனர்.
விமர்சனம்
அதை இப்போது ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளேடு வெளியிட்டு டிரம்ப்பை சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது. டிரம்பை கடுமையாக விமர்சித்து வரும் ஹிலாரிக்கு இது ‘அல்வா’ சாப்பிட்டது போல் அமைந்துவிட்டது. ஹிலாரியும் தனது பங்குக்குக்கு டிரம்பை கடுமையாக வறுத்த எடுத்து வருகிறார்.
ஹிலாரி வெளியிட்ட அறிக்கையில், “ டிரம்பின் கருத்து மிகவும் கொடுமையானது. பெண்கள் குறித்து மோசமான எண்ணம் கொண்ட ஒருவரை நாம் நாட்டின் அதிபராக தேர்வு செய்துவிடக்கூடாது. இதுபோன்ற மனப்பான்மை மிகவும் கீழ்த்தரமானது. இதைக் கேட்டாலே அருவருப்பாக இருக்கிறது'' எனத் தெரிவித்து இருந்தார்.
பாதிப்பு
அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், பெண்கள் குறித்து டிரம்ப் பேசிய ஆபாச பேச்சால், டிரம்ப்பின் வெற்றி வாய்ப்பு பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த, டொனால்ட் டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் மன்னிப்பு கோரினார்.
மன்னிப்பு
இது குறித்து டொனால்ட் டிரம்ப் பேஸ்புக்கில் மன்னிப்பு கோரி 91 வினாடிகள் ஓடும் வீடியோவை வெளியிட்டுள்ளார் அதில் , “ கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நான் தனிப்பட்ட முறையில் ஒருவருடன் பேசியது. அது யாருடைய மனதையும் வேதனைப்படுத்தியிருந்தால் அதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறேன் '' எனத் தெரிவித்திருந்தார்.
டொனால்ட் டிரம்ப் மற்றும் ஹிலாரி இடையிலான 2-ம் கட்ட விவாத நிகழ்ச்சி இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடக்க இருக்கும் நிலையில், இது பெரிய பாதிப்பை அவருக்கு ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
ஏற்றுக்கொள்ளவில்லை
அதேசமயம் டிரம்பின் இந்த பகிரங்க மன்னிப்பை அவர் போட்டியிடும் குடியரசுக்கட்சியின் தலைமையை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பால் ராயன் கூறுகையில், “ பெண்கள் குறித்த டிரம்ப் பேச்சு மிகவும் வேதனைக்குரியது'' எனத் தெரிவித்திருந்தார். அதேபோல, குடியரசுக்கட்சியின் தலைவர் ரீன்ஸ் ப்ரீபஸ் கூறுகையில், “ டிரம்ப்பின் பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது'' எனத் தெரிவித்துள்ளார்.
பெண்கள் குறித்த ஆபாசப் பேச்சு - பகிரங்க மன்னிப்பு கோரினார் டொனால்ட் டிரம்ப்
Latest Videos
