குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தினால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா..? மலேசிய பிரதமர் எச்சரிக்கை..!
குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தினால் நாட்டில் மிகப்பெரிய குழப்பமும் உறுதியற்ற தன்மையும் ஏற்படும். நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் பாதிக்கப்படுவார்கள்’என மலேசிய பிரதமர் மகாதீர் பின் முகமது கவலை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்ட மசோதவிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறைகளும் அரங்கேறி வருகின்றன.
தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகள் நாளை மறுநாள் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்நிலையில், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் கலந்து கொண்ட அந்நாட்டு பிரதமர் மகாதீர் பின் முகமது, ‘’மதச்சார்பற்ற நாடு என்று கூறும் இந்தியா, இப்போது சில முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்க நடவடிக்கை எடுத்து வருவதைக் கண்டு நான் வருந்துகிறேன். நாம் இதை மலேசியாவில் செய்தால், என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். நாட்டில் மிகப்பெரிய குழப்பமும் உறுதியற்ற தன்மையும் ஏற்படும். நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் பாதிக்கப்படுவார்கள்’எனத் தெரிவித்தார்.
மலேசிய பிரதமரின் இந்த கருத்துக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது. ‘மலேசிய பிரதமர் கூறிய கருத்து உண்மையிலேயே தவறானது. உண்மைகளைப் பற்றி சரியான புரிதல் இல்லாமல் இந்தியாவின் உள்துறை விவகாரங்களை பற்றி மலேசியா கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும்’ எனக் கூறியுள்ளது.