கிட்டத்தட்ட 10 கிலோ தங்கத்தில் வடிவமைக்கப்பட்ட உலகின் விலையுயர்ந்த ஆடை குறித்த சுவாரசிய தகவல்களை காணலாம்.

பல வண்ணக் கற்கள், ஜொலிக்கும் தங்கத்தில் ஒரு கவுன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக பிரபலங்கள் கவர்ச்சிகரமான ஆடைகளை அணிந்து அவ்வப்போது அசத்துவார்கள். கடந்தாண்டுகூட அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியும், ராதிகா மெர்ச்சன்ட்டும் தங்க ஆடை அணிந்ததாக ஒரு புகைப்படம் வைரலானது. ஆனால் அது உண்மையில் தங்க ஆடை இல்லை என பின்னர் தெரியவந்தது. அது ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மாயாஜாலம். ஆனால் இப்போது உண்மையில் தங்க ஆடை ஒன்று பிரபலமாகிவருகிறது.

இந்த ஆடை முழுக்க தங்கத்தால் மட்டுமே வடிவமைத்துள்ளார்கள். கிட்டத்தட்ட 10 கிலோ தங்கம் என்றால் சும்மாவா? இந்த ஆடை அண்மையில் துபாயில்தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. துபாயில் ஷார்ஜா எக்ஸ்போ மையத்தில் நடைபெற்ற வாட்ச் அண்ட் ஜூவல்லரி மிடில் ஈஸ்ட் ஷோவில் தான் உலகிலேயே முதல் முதலாக வடிவமைக்கப்பட்ட விலையுர்ந்த "தங்க உடை" காட்சிப்படுத்தப்பட்டது. இப்போது கின்னஸ் உலக சாதனையிலும் இந்த உடை இடம்பிடித்துள்ளது.

தங்க உடையின் சிறப்பு

தங்கத்தால் ஒவ்வொரு இஞ்ச்சும் பார்த்து பார்த்து வடிவமைக்கப்பட்ட இந்த கவுனை 980 மணிநேரம் கவனமாக கைவேலைப்பாடுகளால் உருவாக்கியுள்ளானர். உலகிலேயே மிக கனமான இந்த தங்க உடை துபாய் உடை என்றும் அழைக்கப்படுகிறது. சுமார் 10.0812 கிலோகிராம் எடை கொண்ட 21 காரட் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த உடையை பிரசித்தி பெற்ற சவுதி நகைக் கடையான அல் ரோமைசான் தங்கம், நகைகளால் செய்துள்ளார்கள்.

முதலாவதாக இந்த உடை ஷார்ஜா வாட்ச் & நகை கண்காட்சியில் தான் காட்சிப்படுத்தப்பட்டது. காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் அழகு, இந்த ஆடையில் உள்ளது. இதன் பிரம்மாண்டமான தோற்றமும், கைவினைத்திறனும் காண்போரின் மனதை கவர்ந்தது.

தங்க உடையின் மதிப்பு

இந்த உடையின் மதிப்பு துபாய் திர்ஹாம்களுக்கு 4.6 மில்லியன் அல்லது தோராயமாக ரூ.11 கோடியாகும். இந்த ஆடையை காண்போர் வாயடைக்கும் வகையில் ஆடம்பரமும், பேஷனும் கலந்துள்ளது. இந்த உடையானது 398 கிராம் மதிப்பிலான தங்க கிரீடம், 8,810.60 கிராம் நெக்லஸ், 134.1 கிராம் காதணிகள், 738.5 கிராம் எடை கொண்ட ஒரு ஹெயார் (தலைக்கவசம் போப்றது) ஆகியவற்றைக் கொண்டது.

இந்த ஆடையில் தாங்கி நிற்கும் ஒவ்வொரு ஆபரணங்களும் தனியாக வடிவமைக்கப்பட்டு அதோடு பொருந்தும் வகையில் செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுக்க தங்கத்தின் விலையும் மதிப்பும் உயர்ந்து வரும் நிலையில் துபாயில் செய்யப்பட்ட இந்த ஆடை கவனம் ஈர்த்து வருகிறது.

இந்த உடை குறிப்பிட்டு யாருக்காகவும் வடிவமைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால் இந்த தங்க உடை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைமைத்துவத்தை காட்டுகிறது. தங்கம், நகை ஆர்வலர்களுக்கான முதன்மையான இடமாக துபாய் இருப்பதை பிரதிபலிக்கிறது. துபாய் கைவினைஞர்களின் தனித்துவமான படைப்பாற்றலை எடுத்துரைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.