நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்ததி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.
death penalty stayed for kerala nurse nimisha priya: கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மரண தண்டனையில் இருந்து அவரை காப்பாற்ற மத்திய அரசு, கேரள அரசு பெரும் முயற்சி எடுத்து வந்த நிலையில், ஏமன் அரசு நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா (38). இவர் ஏமனில் செவிலியராக பணிபுரிந்தார்.
கேரள செவிலியர் நிமிஷா பிரியா
கடந்த 2017ம் ஆண்டு தனது தொழில் பங்குதாரரான ஏமன் நாட்டைச் சேர்ந்த தலோல் அப்டோ மஹ்தி என்பவரை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. விசாரணையின் முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டு நிமிஷா பிரியாவுக்கு 2020ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. நாளை (ஜூலை 16) அவரை தூக்கிலிட தேதி குறிக்கப்பட்டது. நிமிஷா பிரியா காப்பாற்ற இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தபோதிலும் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.
கடைசி நம்பிக்கை
இதனால் கடைசி நம்பிக்கையாக கொலை செய்யப்பட்ட தலோல் குடும்பத்தினருடன் மற்றொரு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தியாவின் மூத்த மத தலைவரான காந்தபுரம் ஏ.பி. அபுபக்கர் முஸ்லியார் இந்த பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தார். தலோலலின் நெருங்கிய உறவினரும், ஹுதைதா மாநில நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியுமான ஷேக் ஹபீப் உமர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றார்.
நிமிஷா பிரியா மரண தண்டனை நிறுத்தி வைப்பு
இந்த நிலையில் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஏமன் அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நிமிஷா பிரியா விடுதலையை பெறுவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள அதிரடி கவுன்சிலால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மறுபரிசீலனை செய்ய ஒப்புக்கொண்டனரா?
கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் முதலில் இரத்தப் பணத்தை ஏற்க மறுத்திருந்தாலும், இப்போது பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகவும், தங்கள் நிலையை மறுபரிசீலனை செய்ய ஒப்புக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய கிராண்ட் முஃப்தி மற்றும் சுன்னி தலைவர் காந்தபுரம் ஏ.பி. அபூபக்கர் முசல்யாரின் தலையீடு இந்த பிரச்சனையில் நல்ல ஒரு முடிவை கொண்டு வந்துளள்ளது.
