கொரோனா வைரசின் மிக மோசமான தாக்கம் இனிதான் ஏற்படப்போகிறது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

சீனாவின் வுகான் நகரில் கொரோனா தாக்கம் கண்டறியப்பட்டு 6 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் உலகெங்கிலும் சுமார் 1 கோடி பேருக்கு மேல் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 5 லட்சத்தை கடந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் உலக நாடுகளுக்கிடையே ஒற்றுமை இல்லை என கவலை தெரிவித்தார். தற்போது இருப்பதைக் காட்டிலும், வைரசின் மோசமான பாதிப்பை உலகம் இனிதான் எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். 

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் பணிகளோடு அது உருவாகிய இடத்தை கண்டறிவதும் அவசியம் என்பதால், சீனாவுக்கு குழு ஒன்றை அனுப்ப விருப்பதாகவும் அதானோம் கூறியுள்ளார். இந்த வைரஸ் எப்படி பரவத் தொடங்கியது என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டால்தான் அதற்கு எதிராக சிறப்பாக போராட முடியும், அப்போது தான் எதிர்காலத்துக்காக நாம் தயாராக முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.