முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள்  முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியா முதியவர்களை விட உழைக்கும் மக்களுக்கே முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளது. இது சர்வதேச அளவில் அதிக கவனம் பெற்றுள்ளது.

உலகெங்கிலும் சுமார் 16 நாடுகளில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி விநியோகம் தொடங்கியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அதற்காக முன்னுரிமை குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதை அமல்படுத்துவதில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி முன் களப்பணியாளர்கள் மற்றும் முதியவர்களுக்கு  தடுப்பூசி பெறுவதில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. 

தற்போது இந்தியாவிலும் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி பணிகள் தொடங்கும் என்றும் அதில் சுகாதார பணியாளர்கள் முன் களப்பணியாளர்கள். முதியோர்களுக்கு கொரோனா தடுப்பூசி பெறுவதில் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. அரசாங்கத்தின் திட்டப்படி 300 மில்லியன் மக்கள்  இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இந்த மாதம் தடுப்பூசி தொடங்கும் நாடுகளில் இந்தோனேஷியாவும் ஒன்று. ஆனால் மற்ற நாடுகளைவிட இங்கு ஒரு சிறிய மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. முதியோரை விட உழைக்கும் மக்களுக்கு தடுப்பூசி பெறுவதில் முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது சுகாதார பணியாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் உழைக்கும் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. 

அதன் மூலம் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக அடைந்து கொரோனா வைரஸை விரைவாக கட்டுப்படுத்தவும், மீண்டும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும்  முடியும் என்ற நம்பிக்கையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. ஆனால் இது அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, மற்றும் இன்னும் பிற மேற்கத்திய நாடுகளில் திட்டங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டவை ஆகும். எனவே உலகெங்கிலும் உள்ள தடுப்பூசி நிபுணர்கள் மற்றும் பொருளாதார வல்லுனர்கள் இதை உற்று கவனிக்க தொடங்கியுள்ளனர். இது குறித்து தெரிவித்துள்ள இந்தோனேசிய அரசு, முக்கிய இரண்டு காரணங்களை கூறியுள்ளது. 

சீன நிறுவனமான சினோவாக் பயோடெக் தடுப்பூசி இந்தோனேசியாவில் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த தடுப்பூசி வயதானவர்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பது குறித்து எந்த தரவுகளும் இல்லை. 18 முதல் 59 வயது உடையவர்கள் மீது அதிக அளவிலான சோதனைகளை நிகழ்ந்துள்ளன. இதன் காரணமாக அவர்களுக்கு முன்னுரிமை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல இந்தோனேசியா மருந்து ஆராய்ச்சியாளர்கள் முதியவர்களுக்கான தடுப்பூசி திட்டம் குறித்து எந்த பரிந்துரைகளையும் வழங்கவில்லை என சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி சிட்டி நதியா தரமிஜி  கூறியுள்ளார்.