அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது அந்நாட்டு மக்களை மீண்டும்  அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கொரோனா வைரஸின் கோரப்பிடியில் சிக்கி உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8.12 கோடியை கடந்துள்ளது. இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்து வரும் எண்ணிக்கை 5.24 கோடியை தாண்டியுள்ளது. இதுவரை 17.7  லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.  அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் 6 இடங்களை பிடித்துள்ளன. இதில் அமெரிக்காவே முதல் இடத்தில் உள்ளது. கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்த நிலையில். திடீரென மீண்டும் அமெரிக்காவில் வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

அமெரிக்க அரசாங்கத்தின் கோவிட் ட்ராக்கிங் திட்டம் (சிடிபி) கடந்த திங்கட்கிழமை இரவு அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. இது ஒட்டு மொத்த உலகத்தையும் மீண்டும் கவலை அடைய வைத்துள்ளது. ஒரே நாளில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 235 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கோவிட் ட்ராக்கிங் தெரிவித்துள்ளது. ஒரே நாளில் ஒரு லட்சத்தையும் கடந்து நோயாளிகள் அனுமதிக்கப்படுவது இது 27ஆவது நாளாக கருதப்படுகிறது. டிசம்பர் 27 அன்று 1 லட்சத்து 18 ஆயிரம் நோயாளிகளும், டிசம்பர் 25 ஆம் தேதி அன்று 1 லட்சத்து 18 ஆயிரம் நோயாளிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியாவே ஹாட்ஸ் பாட்டாக இருந்து வருகிறது. எனவே அங்கு ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு கலிபோர்னியாவில் அதிக அளவிலான வைரஸ்  பரவல் இருந்து வருகிறது. 

அதேபோல் பிரிட்டனில் புதிய வகை வைரஸ் உருவாகியுள்ள நிலையில் அந்த வைரசிற்கான தடுப்பூசி ஆராய்ச்சியை நோவா வேக்ஸ் பயோடெக் நிறுவனம் தொடங்கியுள்ளது. மூன்றாவது கட்ட பரிசோதனை நடந்து வரும் நிலையில் திரிபு கொரோனா வைரசுக்கான ஆராய்ச்சியை தொடங்கியுள்ளதாகவும் அந்நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.  அதற்கான முடிவுகள் வர சில வாரங்கள் ஆகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி சோதனையில் புதிய உருமாற்ற மடைந்துள்ள  வைரசுக்கு இத் தடுப்பூசிகள் எந்த அளவுக்கு ஈடுகொடுக முடியும் என்பதை கண்டறிவதற்கான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பைசர் மற்றும் மாடர்னா உள்ளிட்ட தடுப்பூசி ஆராய்ச்சி நிறுவனங்களும் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.