அருணாசலப் பிரதேசத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்றதற்கு சீனா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

அருணாசலப் பிரதேசம் உருவாக்கப்பட்டதன் 34 ஆம்  ஆண்டு தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.  இந்த பயணம் குறித்து  சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் சுவாங்  பெய்ஜிங்கில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது  அவர் , ‘’அருணாசலப் பிரதேசம் என அழைக்கப்படும் பகுதியை சீன அரசு அங்கீகரிக்கவில்லை. அப்பகுதி திபெத்தின் தென்பகுதி என்பதில் சீனா உறுதியாகவும், தெளிவாகவும் இருக்கிறது. அருணாசல பிரதேசத்துக்கு இந்திய தலைவர்கள் செல்வது சீன இறையான்மைக்கு எதிரானது. எல்லையில் நிலவும் ஸ்திரதன்மை, இருநாடுகளிடையே பரஸ்பர அரசியல் நம்பிக்கையை பாதிக்கும் செயல். இருநாடுகளின் ஒப்பந்தத்தை மீறும் நடவடிக்கை’’என்று அவர் குற்றம்சாட்டினார்