சீனாவில், ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன் மனைவியின் சிகிச்சைக்காக ஜியா சாங்லாங் என்பவர் சர்க்கரைவள்ளிக் கிழங்கு விற்று நிதி திரட்டினார். இவரது நிலையை அறிந்த ஃபாங் என்ற விவசாயி, அவருக்கு 50 டன் சர்க்கரைவள்ளிக் கிழங்குகளை இலவசமாக வழங்கியுள்ளார்.
சீனாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது மனைவியின் மருத்துவச் செலவுக்காகச் சர்க்கரைவள்ளிக் கிழங்கு விற்று நிதி திரட்டி வரும் ஒரு நபருக்கு, ஒருவர் 50 டன் சர்க்கரைவள்ளிக் கிழங்குகளைத் தானமாக வழங்கியுள்ளார்.
கண்ணீர் போராட்டம்
சீனாவின் ஷான்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜியா சாங்லாங் (Jia Changlong) என்பவரின் மனைவி லி, கடந்த ஜூலை மாதம் ரத்தப் புற்றுநோயால் (Leukaemia) பாதிக்கப்பட்டார். பள்ளிப் பருவத்திலிருந்தே காதலித்து மணம் முடித்த இந்தத் தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளான்.
மனைவியின் ஆரம்பக்கட்ட சிகிச்சைக்காக ஜியா ஏற்கனவே 3.5 லட்சம் யுவான் (சுமார் ₹41 லட்சம்) செலவு செய்துவிட்டார். "எங்களிடம் இருந்த சேமிப்பு, நண்பர்களிடம் வாங்கிய கடன் என அனைத்தும் தீர்ந்துவிட்டது. கடைசியாக என் கணினியையும் விற்றுவிட்டேன். இனி விற்பதற்கு எங்களிடம் எதுவுமே இல்லை" என ஜியா உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
விவசாயி ஃபாங் செய்த உதவி
அடுத்தகட்டமாக எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு (Bone marrow transplant) மேலும் பல லட்சங்கள் தேவைப்பட்டதால், ஜியா வீதியோரம் அமர்ந்து சர்க்கரைவள்ளிக் கிழங்கு விற்கத் தொடங்கினார். இவரது கதையைச் சமூக வலைதளத்தில் அறிந்த ஃபாங் என்ற நபர், ஜியாவைத் தொடர்பு கொண்டு தன்னிடம் உள்ள 50 டன் சர்க்கரைவள்ளிக் கிழங்குகளை இலவசமாகத் தருவதாகக் கூறினார்.
விவசாயியான ஃபாங் கூறுகையில், "இந்த இளைஞன் மிகவும் பொறுப்பானவன். கடினமான காலத்தில் இருக்கும் அவருக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்ய விரும்புகிறேன்" என்கிறார். தற்போது ஜியா அந்தச் சர்க்கரைவள்ளிக் கிழங்குகளை விற்று வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் பாராட்டு
இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவியது. விவசாயி பாங், ஜியாவுக்கு தானமாக வழங்கியதன் மூலம் அவருக்கு உதவி செய்ததோடு, சாமானிய மக்களும் உதவி செய்துள்ளார் என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
"நாங்கள் இருவரும் சேர்ந்து எங்கள் குழந்தை வளர்வதைப் பார்க்க வேண்டும், அதுதான் எங்களின் ஒரே ஆசை" என ஜியா கண்ணீருடன் கூறுகிறார்.


