அமெரிக்காவில் ஆபத்தான கிருமியை பரப்பியதற்காக சீனர்கள் இருவரை அமெரிக்க புலன் விசாரணை அமைப்பு (FBI) கைது செய்துள்ளது.
ஆபத்தான கிருமியை பரப்பிய சீனா
உலக நாடுகள் மற்ற நாடுகள் மீது போர் புரியும் முறையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளன. அந்த வகையில் சீனா பயோ போர் முறையை கையில் எடுத்துள்ளது அம்பலமாகியுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்தே உலக நாடுகள் மீண்டு வராத நிலையில் தனது அடுத்த ஆட்டத்தை சீனா தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் உணவுச்சங்கிலி மீது தாக்குதல் நடத்தும் விதமாக ‘ஃபுசேரியம் கிராமினேரம்’ என்ற ஆபத்தான கிருமியை இரண்டு சீனர்கள் மூலம் அமெரிக்காவுக்குள் சீனா அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
‘ஃபுசேரியம் கிராமினேரம்’ கிருமியை கடத்திய சீனர்கள்
சீனாவைச் சேர்ந்த யுன்கிங் ஜியான் (33) மற்றும் ஜுன்யோங் லியு (34) ஆகியோர் மீது சதித்திட்டம் தீட்டுதல், அமெரிக்காவிற்குள் பொருட்களை கடத்துதல், விசா மோசடி ஆகிய குற்றச் செயல்கள் தொடர்பான குற்றப் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க வழக்கறிஞர் ஜெரோம் எஃப். கோர்கன், ஜூனியர் அறிவித்தார். ஜியானும் லியுவும் அமெரிக்காவிற்குள் ‘ஃபுசேரியம் கிராமினேரம்’ என்ற பூஞ்சையை கடத்தியது தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக FBI ஜியானை கைது செய்தது. அறிவியல் ஆய்வுகளின்படி, இந்த பூஞ்சை வேளாண் பயங்கரவாத ஆயுதமாக வகைப்படுத்துகிறது.
‘ஃபுசேரியம் கிராமினேரம்’ ஏற்படுத்தும் விளைவுகள்
இந்த தீங்கு விளைவிக்கும் பூஞ்சை கோதுமை, பார்லி, மக்காச்சோளம் மற்றும் அரிசியின் நோயான "தலை கருகல்" நோயை ஏற்படுத்துகிறது, மேலும் ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் பில்லியன் கணக்கான டாலர்கள் பொருளாதார இழப்புகளுக்கு காரணமாகிறது. ‘ஃபுசேரியம் கிராமினேரமின்’ நச்சுகள் மனிதர்கள் மற்றும் கால்நடைகளில் வாந்தி, கல்லீரல் பாதிப்பு மற்றும் இனப்பெருக்க குறைபாடுகளை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.
சீன கம்யூனிஸ்ட் கைக்கூலிகள் - விசாரணையில் அம்பலம்
இந்த நோய்க்கிருமி குறித்த பணிக்காக ஜியான் சீன அரசாங்கத்திடமிருந்து நிதியை பெற்றதும், அவருடைய மின்னணு சாதனங்களில் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருப்பதையும், அதற்கு அவர் விசுவாசமாக இருப்பதை விவரிக்கும் தகவல்களும் இருப்பதாக FBI-ன் புகார் கூறுகிறது. இந்த இரண்டு பேர் மீதும் அமெரிக்காவின் மையப் பகுதிக்குள் சாத்தியமான வேளாண் பயங்கரவாத ஆயுதம் என்று விவரிக்கப்படும் பூஞ்சையை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் தங்கள் திட்டத்தை மேம்படுத்த அவர்கள் அமெரிக்காவில் மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வகத்தை பயன்படுத்த திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது.
திறம்பட செயல்பட்ட அமெரிக்க புலனாய்வு அமைப்பு
FBI புலனாய்வு அமைப்பின் முயற்சிகள் அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு கள நடவடிக்கை அலுவலகத்தின் ஒப்புதலுடன் இந்த ஆபத்தான நடவடிக்கைகள் திறம்பட நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மிச்சிகனில் வசிப்பவர்களை பாதுகாக்கவும், இது போன்ற கடுமையான அச்சுதல்களுக்கு எதிராக அமெரிக்காவை பாதுகாக்க FBI உறுதி பூண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க உயிர்களையும், அமெரிக்காவின் பொருளாதாரத்தையும் பாதுகாப்பதற்கு FBI தொடர்ந்து அயராது உழைத்துக் கொண்டே இருக்கும் என அதன் இயக்குனர் காஷ் பட்டேல் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
