தடுப்பூசி தயாரானவுடன் பொதுநன்மைக்கு வழங்குவோம்..!! சீனா உறுதி..!!
தடுப்பூசிகள் பயன்படுத்த தயாரானவுடன் அவை உலகளாவிய பொது நன்மைக்கு வழங்கப்படும், அதேபோல் தடுப்பூசி மலிவு விலையில் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வதில் சீனா தனது பங்களிப்பை செலுத்தும்
சீனாவில் தடுப்பூசி தயாரானவுடன் உலகளாவிய பொது நன்மைக்கு வழங்கப்படுமென சீனா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் வாங் ஷிகாங் கூறினார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது உலகளவில் 71 லட்சம் பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, ஸ்பெயின், பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவே இந்த வைரசால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 20 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 1 லட்சத்து 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு உலக நாடுகள் இந்த வைரஸை கட்டுப்படுத்த எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டும், இந்த வைரஸ் கட்டுக்கடங்காமல் கொத்து கொத்தாக மனிதர்களை தாக்கி வருகிறது.
ஒரு பிரத்தியேக தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாது என மருத்துவர்கள் கூறி வரும் நிலையில், உலகளவில் சுமார் 30க்கும் மேற்பட்ட பல முன்னணி நிறுவனங்கள் தடுப்பூசி ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வருகின்றன. சுமார் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் இரவு பகல் பாராமல் தடுப்பூசி ஆராய்ச்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். உலகமே தடுப்பூசியை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், சீனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. விரைவில் அதற்கான சோதனைகள் நிறைவுற்று இன்னும் ஒரு சில மாதங்களில் தடுப்பூசி மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது. இந்நிலையில் சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் வாங் ஷிகாங் தடுப்பூசி குறித்து பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறிய அவர், சீன ஆராய்ச்சியாளர்கள் தடுப்பூசி கண்டுபிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தடுப்பூசி உருவாக்குவது மிகவும் கடினமானது, அதற்கு அதிக நேரம் எடுக்கும், அனைத்து தடுப்பூசிகளும் மனித பரிசோதனையில் இருந்து வருகிறது, மனிதர்கள் மீது ஐந்து தனித்தனி மருத்துவ பரிசோதனைகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர்.
தடுப்பூசி மிகத்துல்லியமாக விரைவில் கண்டுபிடிக்கப்படும் என தெரிவித்துள்ள அவர், எதிர்கால covid-19 தடுப்பூசி சோதனைகளில் சீனா சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தும், என்றார். மேலும் “தடுப்பூசி மேம்பாடு, மருத்துவ பரிசோதனைகள், பயன்பாடு ஆகியவற்றில் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார். பாதுகாப்பு, செயல்திறன், மருந்து கிடைக்கும் நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கொரோனா தடுப்பூசி உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். தடுப்பூசிகள் பயன்படுத்த தயாரானவுடன் அவை உலகளாவிய பொது நன்மைக்கு வழங்கப்படும், அதேபோல் தடுப்பூசி மலிவு விலையில் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வதில் சீனா தனது பங்களிப்பை செலுத்தும் என்றும் உலக சுகாதார நிர்வாகக் குழுவில் ஹீத் சட்டமன்றத்தில் ஜனாதிபதி ஜி ஜின் பிங் கடந்தமாதம் சபதம் செய்தது குறிப்பிடதக்கது.