கொரோனா தடுப்பூசி பரிசோதனை 95% வெற்றி..?? சீன ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை..!!
மூன்றாவது கட்ட பரிசோதனையை இங்கிலாந்தில் நடத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதித்த நோயாளிகளை 99% குணப்படுத்தும் தடுப்பூசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெய்ஜிங்கை தலைமையிடமாகக் கொண்ட சினோவாக் என்ற மருந்து ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களிடம் தடுப்பூசி பரிசோதிக்கப்பட்டதில் மருந்து சிறப்பாக செயல்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகமே கொரோனாவை எதிர்த்துப் போராடி வரும் நிலையில், மக்கள் கொத்துக்கொத்தாக நோய்வாய்ப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். இதுவரையில் 60 லட்சத்துக்கும் அதிகமானோர் உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3 லட்சத்து 67 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கொரோனாவை கட்டுப்படுத்த எத்தனையோ நடவடிக்கைகள் எடுத்தும் அதை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. ஒரு பிரத்யேக தடுப்பூசி வந்தால் மட்டுமே இந்த வைரஸில் இருந்து தப்பிக்க முடியும் என்பதால் உலகளவில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள் தடுப்பூசி கண்டுபிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. சுமார் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் இரவு பகல் பாராமல் மருந்து ஆராய்ச்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். இந்நிலையில் பீஜிங்கை தளமாகக் கொண்ட சினோவாக் என்ற தடுப்பூசி ஆராய்ச்சி நிறுவனம் மருந்து கண்டுபிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அதன் இரண்டாவது கட்ட சோதனை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை கொண்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது.
அதில் அந்த மருந்து நல்ல பலனை கொடுத்ததாக கூறப்படுகிறது. இரண்டாவது கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளதால் அதன் மூன்றாவது கட்ட பரிசோதனையை இங்கிலாந்தில் நடத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது தாங்கள் தயாரித்துள்ள தடுப்பூசி கொரோனா வைரஸ்களை தாக்கி அழிப்பதில் வெற்றிகரமாக செயல்படும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த மருந்தின் செயல்பாடு குறித்து செய்தியாளர்கள், ஆராய்ச்சியாளர் லூவோ பைஷனிடம் கேட்டதற்கு ."ஆம், ஆம். நாங்கள் தயாரித்துள்ள மருந்து பரிசோதனையில் வெற்றிகரமாக அமையும் என்று நம்புகிறோம். நிச்சயமாக 99% அது வெற்றி பெறும் என்று அவர் பதிலளித்தார்.