தடுப்பூசிகளே மனிதர்களை காக்கும் கவசமாக இருக்கும்...!! யோக்கிய சிகாமணி போல வேஷம் போடும் சீனா..!!
தடுப்பூசி ஆராய்ச்சியை ஒருங்கிணைப்பதில் உலக சுகாதார அமைப்பின் பங்கு அளப்பரியது.
தடுப்பூசிகளே வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்கும் ஒரு கவசம் என சீனா தெரிவித்துள்ளதுடன், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் தடுப்பூசி ஆராய்ச்சியை ஊக்கப்படுத்துவதே சீனாவின் நிலைப்பாடு என அந்நாடு கூறியுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் வூபே மாகாணம் வுஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்த வைரசால் உலக அளவில் லட்சக்கணக்கான மக்கள் கொத்து கொத்தாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை சுமார் 3 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர். இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர். உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் இந்த வைரஸை கட்டுப்படுத்த எத்தனையோ நடவடிக்கைகளை முன்னெடுத்தும் வைரஸ் மக்களை தாக்கிவருகிறது.
தடுப்புசி என்ற ஒன்று வந்தால் மட்டுமே வைரஸை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர், இதனால் பல்வேறு உலக நாடுகள் வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையில் தடுப்பூசிகள் மற்றும் நோய்த் தடுப்புக்காக உலகளவில் ஒன்று திரட்டப்பட்டுள்ள நாடுகளுக்கான உச்சி மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது, அதில் சுமார் 30க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். அதில் சீன பிரதமர் லீ கெகியாங் கலந்துகொண்டு உரையாற்றினார் அப்போது பேசிய அவர், வீடியோ கான்பரன்சிங் மூலம் உலகளாவிய தடுப்பூசி உச்சிமாநாடு வெற்றிகரமாக நடைபெறுவதை சீனா வரவேற்கிறது, தடுப்பூசி ஆராய்ச்சியை ஒருங்கிணைப்பதில் உலக சுகாதார அமைப்பின் பங்கு அளப்பரியது.
உலக சுகாதார நிறுவனத்தின் நடவடிக்கைகளை சீனா முழுமையாக ஆதரிக்கிறது, மருத்துவ ஆராய்ச்சியில் உலகளாவிய ஒத்துழைப்புக்கு தொடர்ந்து சீனா தனது பங்களிப்பை வழங்கும், இந்த நெருக்கடியான நிலையில் தடுப்பூசிகளே மனிதர்களைப் பாதுகாக்க ஒரு வலுவான கவசமாக இருக்கும் என அப்போது அவர் கூறினார். மேலும், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் தடுப்பூசி வளர்ச்சியை ஆதரிப்பதில் சீனாவின் நிலைபாடு நிலையானது என அப்போது வலியுறுத்தினார். அதேநேரத்தில் வளரும் நாடுகளில் தடுப்பூசி மலிவு விலையில் கிடைப்பதை உறுதிப்படுத்த சீனா தொடர்ந்து பாடுபடும், அனைத்து தரப்பினருடனும் நெருங்கிய தொடர்பை தக்க வைத்துக் கொள்வதுடன், கூட்டுமுயற்சிகளுடன் தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் சர்வதேச ஒத்துழைப்பை சீனா ஆதரிக்கும் என்றும் அவர் கூறினார்.