சீனாவில் மக்கள் ஹாயாக திரையரங்கில் அமர்ந்து சினிமா பார்க்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதையும் கொரோனாவில் அல்லாட வைத்துவிட்டு  சீனா காரர்களுக்கு சினிமா ஒரு கேடா என்ற விமர்சனத்தை இது ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை உலக அளவில் 1 கோடியே 48 லட்சத்து 59 ஆயிரத்து  811பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்து 13, 367பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலகமே இந்த வைரஸை எதிர்த்து கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸை எப்படியாவது கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் உலக அளவில் பல்வேறு நாடுகள் கடுமையான  ஊரடங்கு பிறப்பித்துள்ளன. இதனால் கடந்த நான்கு ,ஐந்து மாதங்களாக மக்கள் வேலை இழந்து, வாழ்வாதாரம் இழந்து போராடி வருகின்றனர். 

ஆனாலும் இந்த வைரஸ் தொற்று கட்டுக்கடங்காமல் மக்களை கொத்துக் கொத்தாக தாக்கி வருகிறது. தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால் உலகமே செய்வதறியாது திகைத்து வருகிறது. அதாவது, கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா தொற்று அங்கு பல்லாயிரக்கணக்கான மக்களை தாக்கியது. சீனாவை தாக்கிய சில மாதங்களிலேயே அந்த வைரஸ் அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பரவி  வேகமெடுத்தது. பின்னர் ஐந்து மாதங்களுக்குப் பிறகு சீனாவில் பெரும்பாலான இடங்களில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்தது, அந்நாட்டு அரசு எடுத்த தீவிர முயற்ச்சியால் பாதிப்பு வெகுவாக குறைந்தது, அதை தொடர்ந்து ஊரடங்கு விலக்கப்பட்டு  சீன மக்கள் மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார். ஆனாலும் பொதுமக்கள் கட்டாயம் மாஸ்க் அணிவதுடன், கட்டாயம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என சீன அரசு அறிவுறுத்தியது.  இதற்கிடையில் சீன தலைநகர் பீஜிங்கில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதாவது ஊரடங்கு காரணமாக பல்வேறு நாடுகளிலிருந்து சீனா திரும்பியவர்கள் மட்டுமே தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் சீனாவில் வுஹான் நகரம் முழுவதும் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் மட்டுமே கொரோனா அங்கொன்றும் இங்கொன்றுமாக தலைகாட்டி வரும் நிலையில், சீனாவில் 90 சதவீதம் அளவுக்கு கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் வணிக வளாகங்கள், திரையரங்குகள், பூங்காக்கள் என சீனா இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இந்நிலையில் சீன திரையரங்கு ஒன்றில் அந்நாட்டு மக்கள் ரிலாக்ஸாக அமர்ந்து சினிமா  பார்ப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் குறித்து பல்வேறு நாட்டினரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர், குறிப்பாக உலகம் முழுவதையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டு, சீனா குதூகலத்தில் இருப்பதாகவும் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர். உலக நாடுகளில் உள்ள மக்களை  எல்லாம் கொரோனா வைரஸ் பீதியில் வீட்டிற்குள்  உட்கார வைத்த சீனாகாரர்களுக்கு சினிமா ஒரு கேடா என குமுறி வருகின்றனர்.