சீனாவில் கொரோனா வைரஸ் பரவும் போது சிறப்பாக பணியாற்றி மக்களின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்களை கௌரவிக்கும் விதமாக நாடு முழுவதும் பிரமாண்ட எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு மருத்துவர்களின் புகைப்படங்கள் அதில்  ஒளிர விடப்பட்டுள்ளன .  இது அந்நாட்டு  மருத்துவர்களுக்கு சீனா வழங்கும் கௌரவமாக கருதப்படுகிறது.  சுமார் 80 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டதில்  மூன்றாயிரம் பேர் மட்டுமே அதில் உயிரிழந்தனர் , கிட்டத்தட்ட  அதில்  98% மக்களை மருத்துவர்கள் தங்கள் உயிரை கொடுத்து  போராடி மீட்டுள்ளனர். 

 

இதை அந்நாட்டு மக்களும் நன்றியுடன் தங்கள் நாட்டு மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.  கடந்த டிசம்பர் மாதம்  சீனாவில் தோன்றிய கொரோனா  வைரஸ்  உலகம் முழுக்கப் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.   சுமார் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதுடன்   இதுவரை உலகளவில் 2. 21 லட்சம் பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் .

இதுவரை  இந்த வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது .  இந்நிலையில் சீனாவில் இந்த வைரஸின் தாக்கம் தற்போது சற்று குறைந்துள்ள நிலையில் ,  இக்கட்டான காலகட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு சுமார் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்களை சீனா கௌரவித்துள்ளது .  

கடந்த மூன்று மாத காலமாக மருத்துவமனையிலேயே தங்கி  24 மணி நேரமும் பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சீனா முழுக்க 18 நகரங்களில் சுமார் 50,000 எல்இடி திரைகள் நிறுவப்பட்டு அதில் அவர்களது புகைப்படங்களுடன் நன்றி தெரிவிக்கப்படுகிறது .  சீனா முழுவதிலுமிருந்து 132 மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் புகைப்படங்கள் இதில் இடம்பெற்றுள்ளன .  தங்கள் நாட்டு மக்களை மரணத்திலிருந்து மீட்ட தேவதைகள் என அந்நாட்டு மக்கள் அம்மருத்துவர்களை புகழ்ந்து வருகின்றனர் .  இந்த நன்றி தெரிவிப்பு சீனாவில் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .