கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமாக கருதப்படும் பாங்கோலின்களை பாதுகாக்கப்பட வேண்டிய விலங்கின வரிசையில் சீனா இணைத்துள்ளது. பாங்கோலினை வேட்டையாடுவது கடுமையான தண்டனைக்குரிய குற்றம் எனவும் அறிவித்துள்ளது. அழிவின் விளிம்பில் இருக்கும் பாண்டா கரடிகளுக்கு இணையாக பாங்கோலின்களும் பாதுகாக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற இறைச்சிகளை விட பாங்கோலின் இறைச்சிக்கு சீனாவில் அதிக வரவேற்பு உள்ளது. அதனுடைய இறைச்சி மிக சுவையானதாகவும், அது பல்வேறு நோய்களை குணப்படுத்துவதாகவும் நம்பப்படுவதே அதற்கு காரணம். சீனாவில்  பாரம்பரிய மருத்துவத்திற்கு பெருமளவில் பாங்கோலின் இறைச்சிகள் பயன்படுத்தப்படுகிறது, இதனால் அது அதிக அளவில் வேட்டையாடப்படும் விலங்காகவும் உள்ளது.  உலகில் அதிக அளவில் கடத்தப்படும் பாலூட்டி இனம் என்றும் கருதப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சுமார் ஒரு மில்லியன்  பாங்கோலின்கள் வேட்டையாடப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு ஆண்டும் 20 டன் பாங்கோலின்கள், அவற்றின் பாகங்கள் சர்வதேச அளவில் கடத்தப்படுவதாகவும் விலங்கு வர்த்தக கண்காணிப்பு வலையமைப்பு தெரிவிக்கிறது. 

covid-19 பாம்புகள் மூலமாகவோ. வவ்வால்கள் மூலமாகவோ வந்திருக்கலாம் என சீன விஞ்ஞானிகள் சந்தேகித்த நிலையில், பாங்கோலின்களே மனிதர்களுக்கு குரோனா வைரஸ் பரப்பிய இடைநிலை விலங்கினமாக இருந்திருக்ககூடும் என  விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதனால் இது அதிக கவனம் பெற்றுள்ளது. உலகம்  முழுக்க பரவியுள்ள இந்த கொள்ளைநோய் சீனாவின் வுஹான் கடல் உணவு மொத்த சந்தையிலிருந்து பரவியிருக்கலாம் என சந்தேகப்பட்டதையடுத்து, அந்த சந்தை மொத்தமாக மூடப்பட்டது, இந்நிலையில் வைரஸ் பரவலுக்கு காரணமாக  கருதப்படும் பாங்கோலின்கள் அதிகப்படியாக வேட்டையாடுதல் மற்றும் அதன் வாழ்விட அழிவு காரணமாக அவற்றின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, அனைத்து வகை பாங்கோலின்களையும் இரண்டாம் தரத்திலிருந்து முதல்தர பாதுகாக்கப்பட்ட விலங்கினமாக சீனா அறிவித்துள்ளது என்று அரசு நடத்தும் குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.  குறிப்பாக முதல்தர பாதுகாக்கப்பட்ட விலங்குகளாக பாண்டாக்கள், திபெத்திய  மான்கள் போன்றவை உள்ளன.  இந்நிலையில் சீனாவின் விலங்குகள் பாதுகாப்பு ஆணையம் உயிரினங்களின் வாழ்விடத்தை மேம்படுத்துதல், வேட்டையாடுதல் மற்றும் கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்காக பாங்கோலின்களுக்காக ஒரு பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் மற்றும் மரபணு வங்கியை அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக அச்செய்தித்தாள் தெரிவித்துள்ளது. 

தற்போது உலகில் 8 பாங்கோலின் இனங்களும் ஆபத்தான உயிரினங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன என்று உலக பாதுகாப்பு விஞ்ஞானி சன் குவான்ஹுய் வெள்ளிக்கிழமை குளோபல் டைம்ஸிடம் தெரிவித்துள்ளார். சீனாவின் யாங்சே ஆற்றின் தெற்கில் உள்ள 17 மாகாணங்களில் பாங்கோலின்கள் அதிகளவில் இருந்து வந்துள்ளது, ஆனால் 2003 ஆம் ஆண்டில் ஒரு தேசிய கணக்கெடுப்பின்படி சீன பாங்கோலின்களின் எண்ணிக்கை சுமார் 64 ஆயிரமாக குறைந்துவிட்டது என்றும் அதன்   வாழ்விடங்கள் 11 மாகாணங்களாக சுருங்கிவிட்டது எனவும் ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.  கடந்த 2007 ஆம் ஆண்டில் சீன காடுகளில் பாங்கோலின்கள் வேட்டையாட தடை செய்யப்பட்டது மற்றும் ஆகஸ்டு 2018ல் பாங்கோலின்கள்  மற்றும் அதன் பொருட்களின் வணிக இறக்குமதிக்கு முற்றிலுமாக தடைவிதிக்கப்பட்டது, ஆனாலும் அதற்கான தண்டனை வலுவாக இல்லாத காரணத்தினால் அவைகள் வேட்டையாடப்படுவது தொடர்ந்தது என குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனவைரஸ் பரவலுக்கு பின்னர் சட்டவிரோத வனவிலங்கு வேட்டையை முற்றிலுமாக தடை செய்வதற்கு சீனா தீர்மானித்துள்ளதையடுத்து, பாங்கோலின்  வேட்டை தண்டனைக்குரிய சட்டம் என கடுமையாக்கப்பட்டுள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கை, விலங்கு நல ஆர்வலர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 

தயவுசெய்து பாங்கோலின்களை விட்டுவிடுங்கள், மனிதர்களுக்கு சாப்பிடுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளது என்றும், மருத்துவம் என்ற பெயரில் பாங்கோலின்களை வேட்டையாடுவது தடுக்கப்படவேண்டும் எனவும்,  சீனப் பாரம்பரிய மருத்துவத்தில் இருந்து பாங்கோலின்கள் நீக்கப்படவேண்டும் என்றும் அப்படி செய்தால் மட்டுமே இந்த இனத்தை பாதுகாக்க முடியும்  எனவும் சீன மக்கள் சமூக வலைதளத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பாங்கோலின்கள் பெருமளவில் மருத்துவ குணமுடையது என கூறப்பட்டு வரும் நிலையில் அறிவியல்பூர்வமாக இதுவரை அது நிரூபிக்கப்படவில்லை என சீனர்கள் இப்போது பேசத் தொடங்கியுள்ளனர்.