சீனாவின் பாக்ஸ்கான் ஆலையில் ஊழியர்கள் காவலர்களுக்கு இடையே மோதல்; போர்க்களமான காட்சிகளுடன் வைரலான வீடியோ!!
சீனாவில் உள்ள ஐபோன் தயாரிக்கப்பட்டு வரும் பாக்ஸ்கான் ஆலையில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல காணப்பட்டது. சிலர் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ஜன்னல்களை அடித்து நொறுக்கிய வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
சீனாவில் இருந்து இதுபோன்ற காட்சிகள் வெளியானது இல்லை. இதற்கு காரணம் அந்த நாட்டின் அடக்குமுறைதான். சமீபத்தில்தான் இதுபோன்ற காட்சிகள் வெளியாகி வருகின்றன. சென்சவ் நகரில் உள்ள ஐபோன் ஆலையில் புதிதாக பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கும், அங்கு காவலில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே இன்று அதிகாலை பெரிய அளவில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் கடுமையான கொரோனா வைரஸ் தொற்று விதிகள் பின்பற்றப்பட்டு வருகிறது. இதை அந்த நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கொரோனாவை திறனற்ற முறையில் கையாளும் அரசாங்கத்திற்கு எதிராக ஆங்காங்கே மக்கள் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கம்யூனிஸ்ட் சீன அரசாங்கம் காவல்துறையை பயன்படுத்தி அடக்கி வருகிறது.
உலகிலேயே மிகப்பெரிய அளவிலான ஐபோன் சென்சவ் நகரில் இருக்கும் பாக்ஸ்கான் நிறுவனத்தில் தயாரிக்கப்படுகிறது. இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு சரியான போனஸ் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இன்று அதிகாலை ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கியதாக கூறப்படுகிறது.
அதிகரிக்கும் கொரோனா.. லாக்டவுனுக்கு பயந்து ஓடும் புலம்பெயர் தொழிலாளர்கள் - வைரல் வீடியோ!
போராட்டத்தில் இறங்கிய ஊழியர்கள், ''எங்களுக்கு எங்களது ஊதியத்தை கொடுங்கள்'' என்று கோஷம் எழுப்பினர். உடனே இவர்களைச் சுற்றி கையில் தடியுடன் காவலர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கியுள்ளனர். மேலும், கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் இருந்து ஊழியர்கள் வெளியேறும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன.
பணியில் இருந்து வெளியேறியவர்களுக்கு பதிலாக சுமார் ஒரு லட்சம் பேரை பணியில் அமர்த்த பாக்ஸ்கான் முயற்சித்துள்ளது. புதிதாக பணிக்கு சேர்ந்தவர்களிடம், ''தனியாக தங்க வைக்கப்படுவார்கள், கொரோனா இருப்பவர்களுடன் வேலை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்'' என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா நோயாளிகளுடன்தான் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒப்பந்தத்தில் குறிப்பிட்டது போல் நடந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடுமையான தனிமைப்படுத்தல் விதிகள் மீதான அதிருப்தி, உணவுப் பற்றாக்குறை, மோசமான சுற்றுப்புற சூழல் போன்ற காரணங்களால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐபோன் தயாரிப்பு நிறுவனத்தின் பாதுகாப்பு வேலியை தாண்டி குதித்து ஊழியர்கள் செல்வது போன்ற வீடியோ வெளியாகி இருந்தது.
தனிமைப்படுத்தல் என்ற பெயரில் ஊழியர்கள் வெளியுலகின் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளனர். ஆலையில் வேலை செய்ய வேண்டும், முடிந்தவுடன் அறைக்கு சென்று விட வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், ஆயிரக்கணக்கான பணியாளர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இவர்களுக்கு பதிலாக புதிதாக தற்போது ஊழியர்கள் சேர்க்கப்பட்டு இருந்தனர். இவர்களும் கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆலையில் கொரோனாவுக்கு முன்பு சுமார் 2 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வந்துள்ளனர். வேலைக்கு ஆட்கள் வேண்டும் என்பதால், அதிக சம்பளம் மற்றும் போனஸ் தருவதாக வாக்குறுதி கொடுத்து பணியில் சேர்க்கப்பட்டனர். ஆனால், கூறியபடி போனஸ் கொடுக்கவில்லை என்பதுதான் போராட்டத்திற்கு காரணமாக உள்ளது. மேலும், சீன அரசின் ஜீரோ கோவிட் என்ற திட்டத்தை அந்த நாட்டு மக்கள் வரவேற்கவில்லை. இதனால், உள்நாட்டு தயாரிப்புகள் குறைந்து, சில இடங்களில் மக்களுக்கு உணவுத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
Covid Cases in China: கவலையில் சீனா! விடாமல் துரத்தும் கொரோனா !3 வாரத்தில் 2.53 லட்சம் பாதிப்பு