திபெத்தில் பாங்காங் ஏரிக்கு கிழக்கே, இந்தியா-சீனா எல்லைக்கு அருகில் சீனா புதிய வான் பாதுகாப்புத் தளத்தை தீவிரமாக கட்டி வருகிறது. செயற்கைக்கோள் படங்கள், ஏவுகணைகளை மறைத்து வைக்கும் திறன் கொண்ட மூடப்பட்ட ஏவுதளங்கள் இருப்பது தெரிகிறது.
திபெத்தில் உள்ள பாங்காங் ஏரியின் கிழக்குப் பகுதியில் சீனா புதிய ராணுவ கட்டுமான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியாவுடன் மோதல் ஏற்பட்ட இடத்திலிருந்து சுமார் 110 கி.மீ. தொலைவில் இந்தக் கட்டுமானங்கள் தென்படுகின்றன.
இந்தியா-சீனா எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு (LAC) அருகில், சீனாவால் கட்டப்பட்டு வரும் இந்த அதிநவீன வான் பாதுகாப்புத் தளம், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
புதிய செயற்கைக்கோள் படங்கள், பாங்காங் ஏரிக் கரையில் கட்டப்பட்டு வரும் சீனப் படைகளின் வான் பாதுகாப்பு வளாகத்தை உறுதிப்படுத்துகின்றன. இந்த வளாகத்தில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டுக் கட்டிடங்கள், படைவீரர்களுக்கான குடியிருப்புகள், வாகனக் கொட்டகைகள், வெடிமருந்து சேமிப்புக் கிடங்குகள் மற்றும் ராடார் நிலைகள் ஆகியவை அடங்கியுள்ளன.
ஏவுகணை ஏவுதளங்கள்
இந்த வளாகத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம், மூடப்பட்ட நிலையில் உள்ள ஏவுகணை ஏவுதளங்களாகும். இந்தத் தளங்கள், ஏவுகணைகளைச் சுமந்து செல்லும், உயர்த்தும் மற்றும் சுடும் திறன் கொண்ட 'டிரான்ஸ்போர்ட்டர் எரெக்டர் லாஞ்சர்' (TEL) வாகனங்களுக்கான, பின்வாங்கக்கூடிய கூரைகளுடன் கூடிய (Retractable Roofs) அமைப்புகளைக் கொண்டிருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்த வலுவூட்டப்பட்ட தங்குமிடங்கள், சீனாவின் நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட HQ-9 ரக ஏவுகணை (Surface-to-Air Missile - SAM) அமைப்புகளுக்கு மறைப்பையும் பாதுகாப்பையும் அளிக்கும் என உளவுத்துறை ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட புவி-உளவுத் துறை நிறுவனமான 'ஆல்சோர்ஸ் அனாலிசிஸ்' (AllSource Analysis) ஆராய்ச்சியாளர்கள் இந்த வடிவமைப்பை முதலில் கண்டறிந்தனர். மேலும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இருந்து சுமார் 65 கி.மீ. தொலைவில் உள்ள கார் கவுண்ட்டி (Gar County) பகுதியிலும் இதேபோன்ற ஒரு வளாகத்தின் மாதிரி (Replica) கட்டப்படுவதையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த இடம், இந்தியா சமீபத்தில் மேம்படுத்திய நியோமா விமானப்படைத் தளத்திற்கு (Nyoma airfield) எதிரே உள்ளது.
செயற்கைக்கோள் படங்கள்
'வான்டோர்' (Vantor) என்ற அமெரிக்க விண்வெளி உளவு நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட செயற்கைக்கோள் படங்கள், ஏவுகணை ஏவுதளங்களின் மீது நகரும் கூரைகள் இருப்பதையும், ஒவ்வொரு தளத்திலும் இரண்டு வாகனங்களை நிறுத்தும் அளவிற்கு இடம் இருப்பதையும் உறுதிப்படுத்துகின்றன. செப்டம்பர் 29 தேதியிட்ட வான்டோர் செயற்கைக்கோள் படங்கள், கார் கவுண்ட்டி வளாகத்தில் குறைந்தது ஒரு ஏவுதளத்தின் கூரைகள் திறந்திருப்பதைக் காட்டுவதுடன், அதன் அடியில் ஏவுகணை செலுத்திகள் இருப்பதையும் வெளிப்படுத்துகிறது.
"மூடப்பட்ட ஏவுகணை ஏவுதளங்கள், கூரையுடன் கூடிய திறப்புகளைக் கொண்டுள்ளன. இதன் மூலம், ஏவுகணைகள் மறைக்கப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் இருக்கும். தேவைப்படும்போது திறப்புகளைத் திறந்து சுட முடியும். இது ஏவுகணை செலுத்திகளின் இருப்பைக் கண்டறிவதற்கான வாய்ப்புகளைக் குறைப்பதுடன், அவற்றை தாக்குதல்களில் இருந்தும் பாதுகாக்கிறது" என்று ஆல்சோர்ஸ் அனாலிசிஸ் தெரிவித்துள்ளது.
இந்தியா-திபெத் எல்லையில் இத்தகைய பாதுகாக்கப்பட்ட ஏவுதளங்கள் புதிதாக அமைக்கப்பட்டாலும், தென் சீனக் கடலில் உள்ள சர்ச்சைக்குரிய தீவுகளில் உள்ள சீன ராணுவ நிலைகளில் இதேபோன்ற வசதிகள் இதற்கு முன்னர் பதிவாகியுள்ளன.
பாங்காங் ஏரிக்கு அருகில் உள்ள இந்த இரண்டாவது தளத்தின் ஆரம்பக்கட்ட கட்டுமானப் பணிகளை, புவியியல் ஆய்வு நிபுணர் டேமியன் சைமன் என்பவர் கடந்த ஜூலை மாத இறுதியிலேயே முதன்முதலில் அடையாளம் கண்டிருந்தார். எனினும், மூடப்பட்ட ஏவுகணை ஏவுதளங்களின் தன்மை அப்போது அறியப்படவில்லை.
இந்த HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பின் பல்வேறு கூறுகளை, அதன் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்துடன் இணைப்பதற்காக கம்பிவழி தரவு இணைப்பு (wired data connection) உள்கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளதையும் ASA ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பாங்காங் ஏரிக்கு அருகில் உள்ள இந்த வளாகத்தின் சில பகுதிகள் இன்னும் கட்டுமானத்தில் உள்ளன.
