ஆண்களை வாடகைக்கு எடுக்கும் பெண்கள்! சீனாவில் டிரெண்டாகும் 'கென்ஸ்' கலாசாரம்!
சீனாவில் வசதிபடைத்த பெண்கள், பாரம்பரிய திருமண உறவுகளைத் தவிர்த்து 'கென்ஸ்' எனப்படும் ஆண்களை வாடகைக்கு அமர்த்தும் புதிய கலாசாரத்தைப் பின்பற்றுகின்றனர். இந்த கென்ஸ்கள் கணவனைப் போல பெண்களுக்கு உணர்ச்சிப்பூர்வமான ஆதரவையும் அளிக்கின்றனர்.

சீனப் பெண்கள் விரும்பும் கென்ஸ்
சீனா, ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளில் இளம் தலைமுறையினர் திருமணம் மற்றும் குழந்தை பெறுவதைத் தவிர்க்கத் தொடங்கியுள்ளதால், இந்நாடுகளின் ஆட்சியாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இந்தச் சூழலை மாற்றியமைக்க அரசுகள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வரும் நிலையில், மக்கள்தொகையில் முதியோரை அதிகம் கொண்டுள்ள சீனாவில் பெண்கள் மத்தியில் ஒரு புதிய கலாசாரம் வேகமெடுத்து வருகிறது.
வைரலாகும் 'கென்ஸ்' கலாசாரம்
சீனாவில் உள்ள வசதிபடைத்த மற்றும் மேல் நடுத்தரக் குடும்பப் பெண்கள், பாரம்பரியமான திருமண உறவுகளைத் தவிர்த்து, தங்கள் தேவைகளுக்காக 'கென்ஸ்' (Kens) என்று அழைக்கப்படும் ஆண்களை வாடகைக்கு அமர்த்தும் முறையை விரும்புகிறார்கள். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், 'கென்' என்பது ஓர் இளமையான, அழகான ஆண் பணியாளர் போன்றவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது, சீனப் பெண்களின் பாரம்பரியமற்ற உறவுகளுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு சேவைத் துறையாக உருவாகியுள்ளது.
கணவனைப் போல செயல்படும் கென்ஸ்
இந்த 'கென்ஸ்' ஆண்கள் சமையல், சுத்தம் செய்தல், வீட்டு வேலைகள், ஷாப்பிங் மற்றும் குழந்தைகளைப் பள்ளியில் இருந்து அழைத்து வருவது போன்ற வீட்டு வேலைகளைச் செய்கிறார்கள். மேலும், ஒரு கணவனைப் போலவே பெண்களுக்கு உணர்ச்சிப்பூர்வமான (Emotional Support) ஆதரவாகவும் இருக்கிறார்கள்.
உயரமான, உடல் தகுதி கொண்ட, மென்மையான போக்குள்ளவர்களே கென்ஸ்களாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவர்கள் பெண்களிடம் ஒருபோதும் வாதிட மாட்டார்கள் என்றும், சாதாரண கணவர்களைப் போல் மறுப்புக் கூறாமல் பெண்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களைப் பூர்த்தி செய்ய எப்போதும் தயாராக இருப்பார்கள் என்றும் அந்தக் வீடியோ கூறுகிறது.
பொறுப்புகளைத் தவிர்க்கும் பெண்கள்
இந்தக் கலாசாரம் தலைதூக்க முக்கிய காரணம், வசதிபடைத்த பெண்கள் ஒரு துணையுடன் வாழ விரும்பினாலும், பாரம்பரிய உறவில் இருக்கும் எந்தவொரு கட்டாயமான பொறுப்புக்கும் கட்டுப்பட விரும்புவதில்லை என்பதுதான். இதற்கு உதாரணமாக, 40 வயதான ஒரு பெண் தொழிலதிபர், தன் மனநிலையைப் பொறுத்து பல கென்ஸ்களை வேலைக்கு அமர்த்தி, அவர்களைச் சுழற்சி முறையில் மாற்றிக்கொள்வதாகவும் வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விசித்திரமான கென்ஸ் கலாசாரம் குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் 4.4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று, ஆதரவாகவும் எதிராகவும் பலதரப்பட்ட கருத்துக்களை ஈர்த்து வருகிறது.