ஐ.நா. சபையில் சஜித் மிர்ரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதைத் தடுத்த சீனா!
26/11 தாக்குதல்கள் தொடர்பாக தேடப்பட்டுவரும் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதி சஜித் மிரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதை சீனா தடுத்துள்ளது.
26/11 தாக்குதல்களில் கொண்ட தொடர்பு காரணமாக தேடப்பட்டுவரும் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதி சஜித் மிர்ரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவும் அமெரிக்காவும் முன்வைத்த யோசனையை சீனா தடுத்துள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அல் கொய்தா தடை கமிட்டியின் கீழ் சஜித் மிர்ரை ஒரு சர்வதேச பயங்கரவாதி என்று அறிவித்து கறுப்புப் பட்டியலில் சேர்த்து, அவரது சொத்துகளை முடக்கி, பயணத் தடை மற்றும் ஆயுதத் தடைக்கு உட்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து கோரிக்கையை முன்வைத்தன. இதற்கு சீனா முட்டுக்கட்டை போட்டிருக்கிறது.
பிரதமர் மோடிக்கு வயலின் இசையுடன் தடபுடலாக விருந்து! வெள்ளை மாளிகையில் களைகட்டும் ஏற்பாடுகள்!
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமும் ஐ.நா.வில் சஜித் மிர்ரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் திட்டத்தை சீனா நிறுத்தி வைத்தது. இப்போது மீண்டும் தொடர்ந்து அதே நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஒருவரான சஜித் மிர், 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையவர். அமெரிக்கா அவரது தலைக்கு 5 மில்லியன் டாலர் பரிசு வழங்குவதாகக் கூறியிருக்கிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தால், பயங்கரவாத நிதியுதவி வழக்கில் சஜித் மிர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பிரதமர் மோடியின் முயற்சிக்கு பிறகு, தினை சார்ந்த உணவுகளை மெனுவில் சேர்த்த நியூயார்க் உணவகம்..
பாகிஸ்தானிய அதிகாரிகள் சஜித் மிர் இறந்துவிட்டதாகக் கூறிவந்தனர். ஆனால் மேற்கத்திய நாடுகள் அதை நம்பவில்லை. அவரது மரணத்திற்கான ஆதாரத்தைக் கோரின. மிர் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த முக்கிய பயங்கரவாதி. 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதற்காக தேடப்பட்டு வருகிறார்.
"மீர் தாக்குதல்களை மேற்பார்வை செய்பவராக இருந்தார், அவர்களின் திட்டமிடல், தயாரிப்பு மற்றும் செயல்படுத்தல் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகித்தார்" என அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுடன் நட்பைப் பேணிவரும் சீனா, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், பாகிஸ்தான் பயங்கரவாதிகளை கறுப்புப் பட்டியலில் சேர்க்க பலமுறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.