புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க 4-வது முறையாக சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது.

காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் பெயரை சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வந்தது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தனர்.

 

இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. பல நாடுகள் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதி பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கத் தயாராக இருந்தபோதிலும், சீனா மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. மசூத் அசார் பெயரைச் சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்கவே கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ஏற்கெனவே கடந்த மூன்று முறை இந்தியா மசூத் அசாரின் பெயரைத் தடைசெய்யப்பட வேண்டிய தீவிரவாத நபர்கள் பட்டியலில் சேர்க்க தீர்மானம் கொண்டு வந்த போது சீனா அப்போது இதனைத் தடுத்தது. அப்போது இதற்கு போதிய ஆதாரமும், உறுப்பு நாடுகளின் அனுமதியும் இல்லை எனக் கூறி சீனா தீர்மானத்தைத் தடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.