இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டே சீன ராணுவம் செய்த சூழ்ச்சி..!! ஊடகங்களில் வெளியான அதிர்ச்சி..!!
24 மணி நேரத்தில் சீன ராணுவம் அந்நாட்டின் வடமேற்குப் பிராந்தியத்தில் சுமார் ஆயிரக்கணக்கான பராட்ரூப்பர்களைக் கொண்டு பிரமாண்ட போர் திறன் ஒத்திகையை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
இந்தியா-சீனா இடையே நடந்து கொண்டிருக்கும் எல்லைத் தகராறில் தீர்வுகாண இந்திய சீன ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்த 24 மணி நேரத்தில் சீன ராணுவம், அதன் வடமேற்குப் பிராந்தியத்தில் ஆயிரக்கணக்கான பராட்ரூப்பர்களைக் கொண்ட மிகப்பெரிய போர் (சூழ்ச்சி) ஒத்திகையை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. தன் ராணுவ வலிமையை பறைசாற்றும் வகையில் அதை செய்து காட்டியதாக கூறப்படுகிறது. இந்தியா-சீனா இடையே எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த மே 5-ஆம் தேதி லடாக் எல்லைப்பகுதியான பாங்கொங் த்சோ ஏரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட சீன படையினருக்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் இருநாட்டு ராணுவ வீரர்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இருதரப்பிலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அதைத்தொடர்ந்து இருநாட்டு உள்ளூர் ராணுவ அதிகாரிகளுக்குமிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பதற்றம் தணிந்தது, அதேபோல் மே 9-ஆம் தேதி சிக்கிம் எல்லையான நகுலா பாஸ் பகுதியில் இருநாட்டு படைவீரர்களும் மோதிக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து மே 22-ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய வீரர்கள் அத்துமீறி நுழைந்து விட்டதாக கூறி சீனா அங்கு ஏராளமான படைகளை குவிக்க தொடங்கியது, இந்தியாவும் பதிலுக்கு படைகளைக் குவித்துவந்த நிலையில் இருநாட்டுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் மே 27-ஆம் தேதியன்று இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான மோதல் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது என ட்ரம்ப் கூறினார். எல்லைப் பிரச்சினையை அமைதியாக தீர்ப்பதற்கு சீன தரப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக இந்தியா பதிலளித்தது, இதற்கிடையில் இந்திய-சீன எல்லை நிலவரம் பொதுவாக கட்டுப்படுத்தக்கூடியது, இருநாடுகளுக்கும் இடையேயான தகவல் பரிமாற்றம் சிறப்பாக உள்ளது, எனவே இதில் மூன்றாவது தரப்பு தலையீடு தேவையில்லை என சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லீ லிஜியான் அமெரிக்காவை புறக்கணித்தார்.
அமெரிக்க அதிபரின் அறிவிப்பை இருநாடுகளும் புறக்கணித்ததைத் தொடர்ந்து இருநாட்டுக்கும் இடையே கிட்டத்தட்ட 12 சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன, ஆனால் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை, இந்நிலையில் 14 கார்ப்பஸ் கமாண்டர் அளவிலான இந்தோ-சீன பேச்சுவார்த்தை சனிக்கிழமை சீன எல்லைப் பகுதியில் உள்ள மோல்டோவில் நடைபெற்றது. 14 கார்ப்பஸ் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங், சீனாவின் தெற்கு சின்ஜியாங் இராணுவ மாவட்டத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் லியு லினுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் இருதரப்புக்கும் இடையே கருத்தொற்றுமை நிலவியதாகவும், சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்று 24 மணி நேரத்தில் சீன ராணுவம் அந்நாட்டின் வடமேற்குப் பிராந்தியத்தில் சுமார் ஆயிரக்கணக்கான பராட்ரூப்பர்களைக் கொண்டு பிரமாண்ட போர் திறன் ஒத்திகையை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது, இது தொடர்பான செய்திகள் சீனா அரசு ஊடகத்தில் வெளியாகியுள்ளது. ஆயிரக்கணக்கான பராட்ரூப்பர்கள், கவச வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் புடைசூழ ஒத்திகை சில மணிநேரங்களில் முடிந்தது என்றும், கூறப்பட்டுள்ளது. போர்சமயத்தில் சீன ராணுவம் எப்படி செயல்படும் என்ற திறனை இந்த பயிற்சி நிரூபித்ததாக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.