கில்ஜித்-பல்டிஸ்தானில் உருகும் பனிப்பாறையில் 28 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அடையாள அட்டை மூலம் அவர் நசீர் உத்தீன் என அடையாளம் காணப்பட்டார். பனிப்புயலின் போது இறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியில், 1997-ல் காணாமல் போன நபரின் உடல், உருகும் பனிப்பாறையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. காலநிலை மாற்றத்தால் பனிப்பாறைகள் உருகி வருவதால், சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை ARY News வெளியிட்டுள்ளது.

கோஹிஸ்தானின் லேடி மெடோஸ் பகுதியில் உள்ள பலசின் பனிப்பாறையில் கண்டெடுக்கப்பட்ட இந்த உடல், பனிப்புயலின் போது மாயமான நசீர் உத்தீன் என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. 28 ஆண்டுகளுக்குப் பிறகும், உடல் நன்கு பாதுகாக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. அவருடைய சட்டைப் பையில் இருந்த தேசிய அடையாள அட்டையின் மூலம் அவர் நசீர் உத்தீன் என அடையாளம் தெரிந்தது.

பனிப்புயலின் போது மரணம்

உள்ளூர்வாசியான உமர் கான் மற்றும் அவருடைய நண்பர்கள் பனிப்பாறை பகுதியில் நடைபயணம் சென்றபோது இந்த உடலைக் கண்டனர். பலஸ் பகுதியைச் சேர்ந்த நசீர் உத்தீன் குடும்பத்தினருடன் சண்டை காரணமாக வீட்டை விட்டு வெளியேறி, சுபாட் பள்ளத்தாக்கு வழியாக சென்றபோது இந்த சோகம் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கோஹிஸ்தான் மாவட்ட காவல்துறை அதிகாரி அம்ஜத் ஹுசைன் இந்த தகவலை உறுதிப்படுத்தினார். நசீர் உத்தீன் பனிப்புயலின் போது பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என அவர் கூறினார். கண்டெடுக்கப்பட்ட உடல் குறித்து இறந்தவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையேற்ற விபத்து

இதற்கிடையில், ஜெர்மனியைச் சேர்ந்த பயத்லான் வீராங்கனை லாரா டால்மேயர், பாகிஸ்தானில் மலையேற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக, பாகிஸ்தான் ஆல்பைன் கிளப் தெரிவித்துள்ளது. கில்ஜித்-பல்டிஸ்தான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஃபைசுல்லா ஃபாரக், பல்டிஸ்தான் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி டால்மேயர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினார். அவருடைய உடலை மீட்கும் பணி முடிந்தவுடன், அரசு ஹெலிகாப்டர் மூலம் உடல் கொண்டு செல்லப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே இரண்டு ஜெர்மனி பெண் மலையேற்ற வீரர்கள் பல்டிஸ்தானின் ஷிகார் மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கியதாகவும், அவர்களில் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில், லாரா டால்மேயர் உயிரிழந்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.