மாஸ் காட்டிய மோடி! பாகிஸ்தான் விமான தளங்கள் 'ஐசியூ'ல கிடக்கு!
பஹல்காம் தாக்குதலுக்கு 22 நிமிடங்களில் பதிலடி கொடுத்ததாகவும், பாகிஸ்தான் விமானப்படைத் தளங்கள் ஐசியூவில் இருப்பதாகவும் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். டிரம்ப் பெயரை குறிப்பிடாமல் மோடி பேசியது குறிப்பிடத்தக்கது.

டிரம்ப் பெயரைச் சோல்லாமல் பேசிய மோடி
கடந்த ஏப்ரல் 22 அன்று நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு வெறும் 22 நிமிடங்களிலேயே பதிலடி கொடுக்கப்பட்டது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து நடைபெற்ற விவாதத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு நாடு முழுவதும் ஆதரவு அளித்தபோதும், காங்கிரஸ் கட்சியின் ஆதரவு மட்டும் கிடைக்கவில்லை என்று கூறிய மோடி, இந்தியாவின் தாக்குதலை நிறுத்தச் சொல்லி எந்த நாடும் கூறவில்லை எனவும் தெரிவித்தார்.
டிரம்ப் கூற்றுகளுக்கு நாடாளுமன்றத்தில் நேரடியாக பதில் அளிக்க முடியுமா என ராகுல் காந்தி சவால் விடுத்திருந்த நிலையில், பிரதமர் மோடி தனது உரையில் டிரம்ப் பெயரையே குறிப்பிடாமல் பேசினார்.
22 நிமிடங்களுக்குள் பதிலடி
"மே 6-7ஆம் தேதி இரவில், இந்தியா திட்டமிட்டபடி நடவடிக்கை எடுத்தது. பாகிஸ்தானால் எதுவும் செய்ய முடியவில்லை. நமது ஆயுதப் படைகள் ஏப்ரல் 22 தாக்குதலுக்கு 22 நிமிடங்களுக்குள் துல்லியமான தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுத்தன," என்று பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் கூறினார்.
இந்திய ஆயுதப் படைகளைப் பாராட்டிய பிரதமர் மோடி, இந்தியா - பாகிஸ்தான் இடையே முன்பே மோதல்கள் நடந்திருந்தாலும், இதுவரை இல்லாத தொலைவுக்குச் சென்று தாக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்றார். "படைகள் பயங்கரவாத மறைவிடங்களை அழித்தன... அணுசக்தி மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என்பதையும் நாங்கள் நிரூபித்தோம்," என்று பிரதமர் மோடி கூறினார்.
ஐசியூவில் பாகிஸ்தான் விமானப் படை தளங்கள்
"பாகிஸ்தானை குறிவைத்து இந்தியா தனது தொழில்நுட்பத் திறமையை வெளிப்படுத்தியது. பாகிஸ்தானின் சொத்துக்களுக்கும் விமானப்படைத் தளங்களுக்கும் நாங்கள் பெரும் அடியைக் கொடுத்தோம், பல விமானப்படைத் தளங்கள் ஐசியூவில் வைக்கப்பட்டுள்ளன," என்று பிரதமர் மோடி கிண்டலாகக் கூறினார்.
பாகிஸ்தானின் முரித் மற்றும் நூர் கான் உட்பட பல விமானப்படைத் தளங்கள் மீது மே 10 அன்று இந்தியா தாக்குதல்களை நடத்தியது. இதற்கு முன்பு பாகிஸ்தான் இந்திய விமானப்படைத் தளங்களை குறிவைத்ததற்கு பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சாட்டிலைட் படங்கள்
இந்தியா நடத்திய ராணுவத் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதத்தின் அளவை சாட்டிலைட் படங்களும் உறுதிப்படுத்தியிருந்தன. 'ஆபரேஷன் சிந்தூர்' மே மாதம் நடைபெற்றபோது, நூர் கான் (சக்லாலா, ராவல்பிண்டி), முரித் (சக்வால்) மற்றும் ரஃபிகி (ஜாங் மாவட்டத்தில் உள்ள ஷோர்கோட்) விமானப்படைத் தளங்கள் இலக்கு வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த 'ஆபரேஷன் சிந்தூர்' ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக மேற்கொள்ளப்பட்டது. அந்த தாக்குதலில் 26 பொதுமக்கள் தங்கள் உயிர்களை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.