பாகிஸ்தான் அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் சைரில் அல்மீதா நாட்டை விட்டு வெளியேற அந்நாட்டு அரசு தடைவித்துள்ளது.
தனிமைப்படுத்துதல்
காஷ்மீர் உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் சென்று தீவிரவாதிகளையும் அவர்களின் முகாம்களையும் அழித்துவிட்டுத் திரும்பினர்.
இதையடுத்து இஸ்லாமாபாத்தில் நடக்க இருந்த சார்க் மாநாட்டை இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் புறக்கணித்தன. மேலும், சர்வதேச அளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை இந்திய அரசு எடுக்கத் தொடங்கியது.
பிளவு
இதனால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் அரசு, சமீபத்தில் நடந்த ஐ.எஸ்.ஐ. மற்றும் ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை சிறிது காலத்துக்கு ராணுவமும், ஐ.எஸ்.ஐ. அமைப்பும் நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படுவோம் என அரசு கேட்டுக்கொண்டது என, அந்நாட்டில் இருந்து வெளியாகும் ‘டான்’ நாளேடு கடந்த 6-ந்தேதி செய்தி வெளியிட்டு இருந்தது.
இந்த செய்தியை சைரில் அல்மீதா என்ற பத்திரிகையாளர் எழுதியிருந்தார். அரசு, ராணுவத்துக்கும் இடையிலான ஆலோசனையின் போது இந்த விவகாரம் பேசப்பட்டதாகவும், இதனால் அரசுக்கும்-ராணுவத்துக்கும் இடையே பிளவு ஏற்படத் தொடங்கி இருப்பதாகவும் அவர் அந்த செய்தியில் தெரிவித்து இருந்தார்.
வெளியேற தடை
இதையடுத்து, சைரில் அல்மீதாவை நாட்டை விட்டு வெளியேற தடை செய்துள்ளவர்கள் பட்டியலில் அந்நாட்டு அரசு சேர்த்துள்ளது.
இது குறித்து டுவிட்டரில் சைரில் அல்மீதா வெளியிட்ட அறிக்கையில், “ நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் என்னுடைய பெயர் சேர்க்கப்பட்டுள்ளது என என்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் வருத்தமாகவும், குழப்பமாகவும் இருக்கிறது. நாட்டைவிட்டு எனக்கு எங்கே செல்லவும் எண்ணம் ஏதும் இல்லை. பாகிஸ்தான் எனது தாய்வீடு. என் நாடு'' எனத் தெரிவித்துள்ளார்.
முதல்பக்கம்
பாகிஸ்தான் மண்ணில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளால் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுடன் பாகிஸ்தான் போர் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தான் அரசுக்கும்-ராணுவத்துக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது என சைரில் அல்மீதா டான் நாளேட்டில் முதல்பக்கத்தில் ‘எக்ஸ்குளுசிவ்’ செய்தி வெளியிட்டு இருந்தார்.
எச்சரிக்கை
இந்த செய்தியை முற்றிலுமாக மறுத்த பாகிஸ்தான் அரசு, இதுபோன்ற ஆதாரமற்ற செய்தியை வெளியிடும் பத்திரிகைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வெளியிட்ட அறிக்கையில், “ ஆதாரமில்லாத, கட்டுக்கதை ெசய்திகளை வெளியிடும் பத்திரிகையாளர்கள், பத்திரிகை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' எனத் தெரிவித்திருந்தார்.
ஆதரவு
பாகிஸ்தான் அரசு சைரில் அல்மீதாவுக்கு தடைவிதித்துள்ள நிலையில், அவருக்கு நாட்டில் உள்ள மூத்த பத்திரிகையாளர்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
