காஷிஷ் சவுத்ரி, பலுசிஸ்தானின் முதல் இந்துப் பெண் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 25 வயதான இவர், BPSC தேர்வில் வெற்றி பெற்று இந்தப் பதவியை அடைந்துள்ளார். இவரது சாதனை இளம் பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு உத்வேகத்தை அளிக்கிறது.
பலுசிஸ்தானைச் சேர்ந்த காஷிஷ் சவுத்ரி, உதவி ஆணையராக நியமிக்கப்பட்ட முதல் இந்து பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவருக்கு வயது வெறும் 25 தான். பலுசிஸ்தானில் மிகவும் வளர்ச்சியடையாத பகுதிகளில் ஒன்றான சாகாய் மாவட்டத்தில் உள்ள நோஷ்கி என்ற நகரத்தில் வசிக்கிறார்.
பலுசிஸ்தான் பொது சேவை ஆணையத்தின் (BPSC) தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு அவர் இந்தப் பதவிக்குத் தகுதி பெற்றுள்ளார். அவரது வெற்றி பல இளம் பெண்கள் மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கு ஒரு உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது.
திங்கட்கிழமை, காஷிஷ் தனது தந்தை கிரிதாரி லாலுடன் குவெட்டாவில் பலுசிஸ்தான் முதல்வர் சர்பராஸ் புக்தியை சந்தித்தார். அப்போது அவர் பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் அதிகாரம் பெறுவதற்காகப் பாடுபடப்போவதாக முதல்வரிடம் கூறினார்.
காஷிஷ் சவுத்ரியின் தந்தை தனது மகளின் இந்த சாதனை பெருமைப்படத்தக்க விஷயம் என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார். நன்றாகப் படித்து பெண்கள் முன்னேற்றத்துக்கு உழைக்க வேண்டும் என்று காஷிஷ் கனவு கண்டதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
காஷிஷ் சவுத்ரி எப்படி வெற்றி பெற்றார்?
காஷிஷ் உள்நாட்டு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், இந்த வெற்றியை அடைய மூன்று வருட கடின உழைப்பும் ஒழுக்கமும் தேவைப்பட்டதாகக் கூறினார். தினமும் எட்டு மணி நேரம் படித்ததாகவும் காஷித் தெரிவித்தார்.
"ஒழுக்கம், கடின உழைப்பு மற்றும் சமூகத்திற்கு பங்களிக்க வேண்டும் என்ற ஆசை ஆகியவை இந்தப் பயணம் முழுவதும் என்னை வழிநடத்தியுள்ளன," என்று அவர் மேலும் கூறினார்.
பாகிஸ்தானில் சாதித்த முதல் இந்துப் பெண்கள்:
பாகிஸ்தானில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற முதல் இந்துப் பெண் காஷிஷ் சவுத்ரி.
ஜூலை 2022 இல், மனேஷ் ரோபெட்டா கராச்சியில் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட முதல் இந்துப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். அவர் அங்கு இன்னும் பணிபுரிந்து வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, 35 வயதான புஷ்ப குமாரி கோலி என்பவர் சிந்து மாகாணத்தில் பொது சேவை தேர்வில் தேர்ச்சி பெற்றார். இப்போது அவர் கராச்சி காவல்துறையில் துணை ஆய்வாளராக பணிபுரிகிறார்.
சுமன் பவன் போதானி, 2019ஆம் ஆண்டு சிந்து மாகாணத்தில் உள்ள தனது சொந்த ஊரான ஷாஹத்கோட்டில் சிவில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
பாகிஸ்தானின் உள்ள பெரும்பான்மையான இந்து மக்கள் சிந்து மாகாணத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
