துபாய்க்கு மீண்டும் சோதனை காலம்... அடித்து வீசும் காற்று... மிரட்டும் வானிலை: விமானங்கள் ரத்து!
துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன
வளைகுடா நாடுகள் வறண்ட வானிலைக்கு பெயர் போனவை. குறிப்பாக, துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் வெயில் சுட்டெரிக்கும் மழை என்பதை நாம் பார்க்க முடியாது. ஆனால், இரண்டு வாரங்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளில் கனமழை பெய்தது. துபாயில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஐக்கிய அமீரகத்தை கனமழை தாக்கியதற்கு முன்பு, ஓமன், தென் கிழக்கு ஈரானை பெருமழை தாக்கியிருந்தது. பஹ்ரைன், ஓமன், கத்தார் மற்றும் சவுதி அரேபியாவிலும் மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாகவே, ஐக்கிய அரபு அமீரகத்தை மழை தாக்கியது.
கனமழை தாக்கத்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் மீண்டு வந்து அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பிய நிலையில், அடுத்த சுற்று மழை பெய்ய தொடங்கியுள்ளது. சவுதி அரேபியாவில் பெய்த கனமழையால் சாலை முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளித்த நிலையில், துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால், ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. துபாயை தளமாகக் கொண்ட எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், மோசமான வானிலை காரணமாக பல விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
“மே 2 ஆம் தேதி துபாய் விமான நிலையத்திற்கு வரும் அல்லது புறப்படும் விமானங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் சில தாமதங்கள் ஏற்படலாம்.” என எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், துபாய் மற்றும் இஸ்தான்புல் இடையேயான EK 123/124, துபாய் - ஜோகன்னஸ்பர்க் இடையேயான EK 763/764, துபாய் - நைரோபி இடையேயான EK 719/720, துபாய் - கெய்ரோ இடையேயான k 921/922, துபாய் - அம்மான் இடையேயான EK 903/904, துபாய் - சிங்கப்பூர் இடையேயான EK 352/353 ஆகிய விமானங்கள் மே 2ஆம் தேதி (இன்று) ரத்து செய்யப்பட்டுள்ளன. மே 3ஆம் தேதி துபாயில் இருந்து அந்நாடு நேரப்படி 12.30க்கு புறப்படும் துபாய் மற்றும் சிங்கப்பூர் இடையேயான EK353 விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அபுதாபியை தளமாகக் கொண்ட எட்டிஹாட் ஏர்வேஸ், மும்பையிலிருந்து அபுதாபி சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற தனது விமானம் EY197ஐ அபுதாபியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக அல்-ஐனுக்கு திருப்பி விடப்பட்டதாக தெரிவித்துள்ளது. மதியம் 1.35 மணியளவில் அபுதாபிக்கு செல்லவிருந்த விமானம் இறுதியில் இரவு 7-30 மணியளவில் தரையிறங்கியது.
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடி ஃபோட்டோ நீக்கம் ஏன்?
நாட்டின் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) நிலைமையைச் சமாளிக்க அனைத்து துறைகளையும் தயார் நிலையில் இருக்குமாறு நேற்றே பணித்திருந்தது. இரண்டு வாரங்களுக்கு முன்பு பெய்த மழையை விட இந்த மழை குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மலைகள், பாலைவனம் மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதிகாரிகள் படகில் செல்ல வேண்டாம் என்றும், பள்ளத்தாக்கு பகுதிகள், தாழ்வான இடங்களை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகனங்களை ஓட்டும் போது எச்சரிக்கையுடன் செயற்படுமாறும், உரிய அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஆங்காங்கே மிதமானது முதல் கனமழை தவிர, அவ்வப்போது இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மேற்குப் பகுதிகள், கரையோரங்கள் மற்றும் சில கிழக்குப் பகுதிகளில் ஆலங்கட்டி மழைக்கான வாய்ப்புள்ளதாகவும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.