எத்தியோப்பியாவில் உள்ள 'ஹெய்லி குப்பி' எரிமலை வெடித்ததால், அதன் சாம்பல் மேகங்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதியை நோக்கி நகர்கின்றன. இதனால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி-என்.சி.ஆர் போன்ற பகுதிகளில் காற்றின் தரம் மோசமடையக்கூடும்.

ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியாவில் 'ஹெய்லி குப்பி' (Hayli Gubbi) எரிமலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக வெடித்துள்ள நிலையில், அதிலிருந்து வெளியான அடர்த்தியான சாம்பல் மேகங்கள் திங்கட்கிழமை இரவு முதல் இந்தியாவின் வடமேற்குப் பகுதியைத் தாக்கும் என்று வானிலை ஆய்வு வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தச் சாம்பல் மேகங்கள் அடுத்த சில மணிநேரங்களில் குஜராத்துக்குள் நுழைந்து, அங்கிருந்து ராஜஸ்தான், டெல்லி-என்.சி.ஆர். மற்றும் பஞ்சாப் ஆகிய பகுதிகளை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமானப் போக்குவரத்து பாதிப்பு

இந்திய வான்வழியை நோக்கிச் சாம்பல் மேகங்கள் நகர்வதால், இந்தியாவின் விமான இயக்கமும் பாதிக்கப்படத் தொடங்கியுள்ளது.

இந்தச் சாம்பல் மேகங்கள், எரிமலைச் சாம்பல், சல்ஃபர் டை ஆக்சைடு மற்றும் சிறிய பாறைத் துகள்கள் ஆகியவற்றைக் கொண்டவை. இவை பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 10 முதல் 15 கி.மீ உயரம் வரை வளிமண்டலத்தில் பரவியுள்ளன. இந்த உயரத்தில் வணிக விமானங்கள் பறப்பதால், விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்படும் என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) தெரிவித்துள்ளது.

செங்கடல் வழியாக மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவை நோக்கிச் சாம்பல் மேகம் நகர்ந்ததைத் தொடர்ந்து, இண்டிகோ (IndiGo) நிறுவனம் ஆறு விமானங்களை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ரத்து செய்யப்பட்ட விமானங்களில் ஒன்று மும்பையிலிருந்து புறப்பட்டதாகும்.

மும்பை விமான நிலைய அதிகாரி ஒருவர், விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியைத் தவிர்த்து வேறு பாதைகளில் திருப்பிவிடப்படுவதாகத் தெரிவித்தார். "இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்த முடியாததால், இந்தச் சாம்பல் மேகங்களால் இந்திய விமான நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்," என்றும் அவர் கூறினார்.

"விமானங்கள் மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும் அல்லது ரத்து செய்யப்பட வேண்டும். இன்று விமானப் போக்குவரத்து பாதிப்பு குறைவாக இருந்தாலும், செவ்வாய்க்கிழமை நிலைமை மோசமடைய வாய்ப்புள்ளது. சாம்பல் மேகங்கள் டெல்லி மற்றும் ஜெய்ப்பூர் மீது செவ்வாய்க்கிழமை அடர்ந்தால், இந்திய விமானப் போக்குவரத்து மிக மோசமாகப் பாதிக்கப்படும்" என்று இத்துறையுடன் தொடர்புடைய ஒருவர் தெரிவித்துள்ளார்.

வானிலை தாக்கம் மற்றும் மாசுபாடு

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் இயக்குநர் ஜெனரல் எம். மொஹாபத்ரா கூறுகையில், இந்தச் சாம்பல் மேகங்கள் மேல்மட்டத்தில் இருப்பதால், தரைமட்டத்தில் பெரிய பாதிப்பு இருக்காது.

இது வானில் மங்கலான மேகமூட்டமாகத் தோன்றும். சில மணிநேரங்களுக்கு இதன் தாக்கம் இருக்கும். நகரங்களில், இந்தச் சாம்பல் மேகம் காரணமாகக் குறைந்தபட்ச வெப்பநிலை லேசாக உயர வாய்ப்புள்ளது.

இந்தச் சாம்பலால் காற்றுத் தரம் (Air Quality) பாதிக்கப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இவை அதிக உயரத்தில் இருப்பதால் குறிப்பிடத்தக்க தாக்கம் இருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார்.

ஏற்கனவே, டெல்லி தேசியத் தலைநகரப் பிராந்தியத்தில் (Delhi-NCR) காற்றின் தரக் குறியீடு (AQI) மிக மோசமான நிலையில் (382) இருந்த நிலையில், இந்த எரிமலைச் சாம்பல் காரணமாக மாசு அளவு மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.