நியூயார்க், அக். 14:-

ஐ.நா. சபையின் புதிய பொதுச்செயலாளராக போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரான அன்டோனியோ கட்டரெஸ் நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு கவுன்சில் ஏற்கெனவே முழுமனதாக ஒப்புதல் அளித்து, பரிந்துரை செய்திருந்த நிலையில், அவர் நேற்று ஐ.நா. பொதுச்சபையால் முறைப்படி நியமிக்கப்பட்டார்.

193 உறுப்பினர் கொண்ட ஐ.நா. பொதுச்சபையில் இவரின் நியமனத்துக்கு நேற்று முறைப்படி ஒப்புதல் அளிக்கப்பட்டது.

புதிய பொதுச் செயலாளராக உறுதிசெய்யப்பட்ட நிலையில், அன்டோனியோ அடுத்த 5 ஆண்டுகள், அதாவது 2022-ம் ஆண்டு வரை பதவியில் இருப்பார்.

தேர்வு

15 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் கடந்த 7-ந் தேதி நடந்தது. அதில், தற்போதைய ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் பதவிக்காலம், வரும் டிசம்பர் 31-ந் தேதியுடன் முடிவடைவதை அடுத்து, புதிய பொதுச்செயலாளராக அன்டோனியோ கட்டரெஸ் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு ஆலோசிக்கப்பட்டது. 67-வயதான கட்டாரெஸை பொதுச் செயலாளராக நியமிக்க 15 உறுப்பினர்களில் 9 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

ஒப்புதல்

இதையடுத்து, 193 உறுப்பினர்கள் கொண்ட பொதுச்சபையில் கட்டாரெஸ் பெயர் குறித்து இறுதி ஒப்புதல் பெறப்பட்டது. பொதுவாக, பாதுகாப்பு கவுன்சில் முடிவு செய்துவிட்டாலே அவரைத்தான் பொதுச்செயலாளராக பொதுச்சபையும் தேர்வு செய்யும் என்பது இயல்பாகும்.

பாராட்டு

புதிதாக தேர்வு செய்யப்பட்டு உள்ள பொதுச்செயலாளர் கட்டாரெசுக்கு இந்தியா பாராட்டு தெரிவித்திருக்கிறது. ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் சையத் அக்பரூதீன் டுவிட்டரில் கூறுகையில், “ வாழ்த்துக்கள், ஐ.நா.வின் புதிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டாரெசை இந்தியா வரவேற்கிறது'' எனத் தெரிவித்திருந்தார்.

யார் இந்த கட்டாரெஸ்.?

போர்ச்சுகலின் தலைநகர் லிஸ்பனில் கடந்த 1949-ம் ஆண்டு பிறந்தவர் அன்டோனியோ கட்டாரெஸ். பள்ளிக் கல்வியில் நாட்டின் சிறந்த மாணவருக்கான விருதை வென்ற கட்டாரெஸ், இயற்பியல் மற்றும் மின்னனுவியலில் இளநிலை பட்டப்படிப்பு முடித்தார். அதன்பின், கடந்த 1974-ல் அந்நாட்டின் சோசலிஸ்ட் கட்சியில் இணைந்தார். 1995-2002 ம்ஆண்டு வரை அந்நாட்டின் பிரதமராக பதவி வகித்தார். அதன்பின் 2005 முதல் 2015 ம் ஆண்டு வரை ஐ.நா.வின் அகதிகளுக்கான ஆணையராக பதவி வகித்தார்.

பொதுச்செயலாளர் பதவிக்கு ஒருநாட்டின் பிரதமராக இருந்தவர் வருவது இதுதான் முதல்முறையாகும்.

சவால்கள்...

புதிய பொதுச்செயலாளராக பதவி ஏற்க உள்ள 63-வயது அன்டோனியோ கட்டாரெசுக்கு எந்தவிதமான தேன்நிலவுக்காலமும் இருக்கப்போவதில்லை. இப்போதுள்ள நிலையில், அதிகரித்து வரும் சர்வதேச தீவிரவாத பிரச்சினை, நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல்கள், கடுமையான சிரியா போர், அகதிகள் சிக்கல், மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான பனிப்போர் ஆகியவை தீர்க்கப்பட வேண்டிய சவால்களாக அவரை எதிர்நோக்கி இருக்கின்றன.