மகாத்மா காந்தியின் சிலை அவமரியாதை செய்யப்பட்டது  மிகவும் அவமானகரமானது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதங்கம் தெரிவித்துள்ளார். சிலையை சேதப்படுத்தியவர்கள்  குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் கறுப்பின மக்களுக்காக குரல் கொடுத்த ஒரே அயல் நாட்டுத் தலைவர் யார் என்றால் அது மகாத்மா காந்தியாகத்தான் இருக்கும். கருப்பின மக்களுக்கு எதிரான நிறவெறியை கண்டித்து, தென்னாப்பிரிக்காவில் பிரிட்டிஷாரை எதிர்த்து பல ஆண்டுகள் போராட்டம் நடத்தியவர் மகாத்மா காந்தி,  இந்நிலையில் கடந்த மே 25-ஆம் தேதி அமெரிக்காவில் காவல்துறை அதிகாரி ஒருவர் ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பினத்தவரின் கழுத்தில் முழங்கால் வைத்து அழுத்தினார். மூச்சு விட முடியாமல் அவர் உயிரிழந்தார், அதற்கான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் அது ஒட்டுமொத்த உலகையும் உலுக்கியது. நிற வெறியுடன் நடத்தப்பட்ட படுகொலை என கூறி அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் போராட்டங்கள் வெடித்தன.

போராட்டத்தை ஒடுக்க ராணுவத்தை களம் இருக்கப் போவதாக  எச்சரிக்கை விடுத்தார் ட்ரம்ப், ஆனாலும் போராட்டம் உக்கிரமடைந்தது. இந்நிலையில் வாஷிங்டனில் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து இந்திய தூதரகம் அருகே உள்ள காந்தி சிலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலையை சேதப்படுத்தியதாக கூறப்படுகின்றது. இதுதொடர்பான விசாரணை அமெரிக்காவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென் ஜெஸ்டர்  மன்னிப்பு கோரியுள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் சிலை அவமரியாதை செய்யப்பட்டதற்கு எங்களது மன்னிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள், ஜார்ஜ் பிளாய்டு கொடூர மரணம் மோசமான வன்முறை மற்றும் சிலை உடைப்பு சம்பவங்கள் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் எப்போதும் அமைதி மற்றும் பாகுபாட்டிற்கு எதிராக இருக்கிறோம். இதிலிருந்து நாங்கள் விரைவில் மீண்டு வருவோம் என அவர் கூறியுள்ளார். இந்நிலையில் திங்களன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், மகாத்மாவின் சிலை உடைக்கப்பட்டது மிகவும் தவறானது என  கூறினார்.

இந்த வழக்கின் ஆரம்ப விசாரணையை இந்திய தூதரகம், அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் பெருநகர காவல்துறை மற்றும் தேசிய பூங்கா சேவை முன்னெடுத்துள்ளது. சிலையை விரைவாக புனரமைக்க அமெரிக்க வெளியுறவுத்துறை, பெருநகர காவல்துறை மற்றும் தேசியப்பூங்கா சேவை ஆகியவை இணைந்து செயல்படுகின்றன. மொத்தத்தில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது அவமானகரமானது என தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபரும் அவரது மனைவி மெலனியா டிரம்பும்  இந்தியா வருகை தந்தபோது குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள காந்தி ஆசிரமத்திற்குச் சென்று பார்வையிட்டனர். அவர்களை பிரதமர் நரேந்திரமோடி தனிப்பட்ட முறையில்  வரவேற்றார், மேலும் புதுதில்லியில் ராஜ்கோட்டில் உள்ள அவரது நினைவிடத்தில், அவர்கள் அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு அமெரிக்காவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வடகரோலினா பாராளுமன்ற உறுப்பினர் டாம் டில்லிஸ் காந்தி சிலையை சேதப்படுத்தியது வெட்கக்கேடானது காந்தி அறப்போராட்டத்தில் முன்னோடி என்று அவர் கூறியுள்ளார்.