அமெரிக்காவில் வாக்குப்பதிவு நடைமுறை பிற நாடுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இந்தியாவைப் போன்று அல்லாமல், ஒவ்வொரு மாநிலமும் தனி நாடு போலச் செயல்படுவதால், ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியாக தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கென பிரத்யேகமான விதிமுறைகளையும் கொண்டிருக்கின்றன.
பொதுவாக அதிபர் தேர்தல்கள் நடக்கும் நாடுகளில் வாக்காளர்கள், போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நேரடியாக வாக்களிப்பார்கள்.
ஆனால் அமெரிக்காவில் நடப்பது மேலோட்டமாகப் பார்ப்பதற்கு நேரடித் தேர்தல் போலத் தோன்றினாலும், உண்மையில் அது நேரடித் தேர்தல் அல்ல. வாக்காளர்கள் நேரடியாக வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதில்லை.
மாறாக தேர்வாளர்கள் எனப்படும் அதிபரைத் தேர்வு செய்யும் பிரதிநிதிகளுக்கே வாக்களிக்கிறார்கள். இந்தத் தேர்தலில் மொத்தம் 538 பிரதிநிதிகளின் வாக்குகள் உள்ளன.

இது அமெரிக்க நாடாளுமன்ற செனட் அவை மற்றும் பிரதிதிகள் அவை ஆகிவற்றுடன் நேரடித் தொடர்புடையது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 535. தலைநகரப் பகுதியான கொலம்பியா மாவட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் கிடையாது.
எனினும் அதிபர் தேர்தலில் அந்த மாவட்டத்துக்கு 3 தேர்வாளர்களின் வாக்குகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆக 538 என்பது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையுடன், இந்த மூன்று உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் சேர்த்த கூட்டுத் தொகையாகும்.
அதிபர் தேர்தலைப் பொறுத்தவரை, மொத்தமுள்ள 50 மாநிலங்களுக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப குறிப்பிட்ட எண்ணிக்கையில் தேர்வாளர்களின் வாக்குகள் வழங்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக கலிஃபோர்னியாவுக்கு 55 வாக்குகளும், டெக்சாஸுக்கு 38 வாக்குகளும் உண்டு.
மாநில மக்கள் கட்சிகளின் சார்பில் பட்டியலிடப்படும் தேர்வாளர்களுக்கு வாக்களிக்கிறார்கள். இந்த நடைமுறை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். பெரும்பாலான மாநிலங்களில் அதிக வாக்குகளைப் பெறும் அதிபர் வேட்பாளருக்கே அந்த மாநிலத்தின் அனைத்து தேர்வாளர் வாக்குகளும் சென்றுவிடும்.
உதாரணத்துக்கு கலிஃபோர்னியா மாநிலத்தில் ஹிலரிக்கு 59 சதவிகித வாக்குகள் கிடைக்கின்றன என்றால், அந்த மாநிலத்தின் 55 தேர்வாளர் வாக்குகளும் அவருக்கே அளிக்கப்படும்.
மெயின் போன்ற சில மாநிலங்களில் இந்த நடைமுறை மாறுபடுகிறது. அந்த மாநிலம், வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் சதவிகிதத்துக்கு ஏற்ப தேர்வாளர்களின் வாக்குகள் பகிர்ந்து அளிக்கப்படும்.
தேர்தல் முடிந்ததுமே வாக்குகள் எண்ணப்படும் அதிக தேர்வாளர்களின் வாக்குகளைப் பெற்றவர் அதிபராக அறிவிக்கப்படுவார். அதிபராகத் தேர்வு செய்யப்படுவதற்கு குறைந்தபட்சம் 270 தேர்வாளர்களின் வாக்குகளைப் பெற வேண்டும்.
ஒரு வேளை சமநிலை ஏற்பட்டால், பிரதிநிதிகள் அவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதிபர் தேர்வு செய்யப்படுவார்.
