ஆப்பிரிக்க எய்ட்ஸ் நோயாளிகளை நாங்கள் தான் காப்பாற்றினோம்..!! அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் WHO-க்கு வைத்த செக்.
ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் பாதித்த நோயாளிகளை உலகச் சுகாதார நிறுவனம் காப்பாற்றவில்லை என குற்றம்சாட்டும் பிரையன் அமெரிக்காவே அவர்களை காப்பாற்றுவதற்கான சுகாதார பணிகளை முன்னெடுத்தது என கூறியுள்ளார்.
உலக சுகாதார அமைப்பில் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு, அதில் உள்ள ஊழல்கள் கலையப்பட்டு, அந்த அமைப்பு அதிகப்படியாக சீனாவை நம்புவதை கைவிடும் பட்சத்தில் மீண்டும் அந்த அமைப்புடன் இணைவது குறித்து அமெரிக்கா பரிசீலனை செய்யும் என அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் தெரிவித்துள்ளார். இல்லை எனில் உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கி வரும் நிதியை இன்னும் பிற சுகாதார நிறுவனங்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது, உலகளவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 லட்சத்தை கடந்துள்ளது. இதுவரை 3.73 லட்சம் பேர் இந்த வைரசால் உயிரிழந்துள்ளனர். எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவை இந்த வைரஸ் மிக கடுமையாக தாக்கியுள்ளது. இதுவரை அந்நாட்டில் 18 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 6ஆயிரத்தை கடந்துள்ளது.
கண்ணுக்கு தெரியாத இந்த சிறிய வைரஸ் கடந்த முன்றே மாதங்களில் உலக வல்லரசான அமெரிக்காவையே நிலைகுலைய வைத்துள்ளது. இதனால் அமெரிக்காவின் ஒட்டு மொத்த கோபமும் சீனாமீது நிரும்பியுள்ள நிலையில், உலகில் ஏற்பட்டுள்ள இந்த பேரிழப்புக்கு சீனாதான் காரணம் என குற்றம்சாட்டியுள்ள அமெரிக்கா, வுஹான் ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் இந்த வைரஸ் கசிந்தது என்றும், அதை முன்கூட்டியே சீனாவால் தடுத்திருக்க முடியும் என்றும், ஆனால் அது அப்படி செய்யத் தவறிவிட்டது எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். அதேநேரத்தில் உலக சுகாதார நிறுவனமும் சீனாவுடன் இணைந்து கொண்டு இந்த வைரஸ் குறித்து உலக நாடுகளை எச்சரிக்கை தவறிவிட்டது என குற்றம்சாட்டிய அவர், அந்த அமைப்புக்கு வழங்கிவந்த நிதியை நிறுத்துவதாக அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி அந்த அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதால் அதனுடனான உறவைத் துண்டித்துக் கொள்வதாகவும் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஓ பிரைன், WHO முழுமையாக சீர் திருத்தப்பட்டு அதன் ஊழல்கள் முடிவுக்கு கொண்டு வரப்படுவதுடன், சீனாவுடனான அதீத நம்பிக்கையை அந்நிறுவனம் கைவிடும் பட்சத்தில் அந்த அமைப்புடனான உறவை புதுப்பிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என கூறியுள்ளார்.
இல்லையெனில், இதுநாள் வரை உலகச் சுகாதார நிறுவனத்திற்கு வழங்கிவந்த 400 மில்லியன் அமெரிக்க டாலர்களை பிற சர்வதேச சுகாதார அமைப்புகளுக்கு செலவிடப் போவதாகவும் பிரையன் கூறியுள்ளார். உலக சுகாதார நிறுவனத்திற்கு சீனா வெறும் 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை மட்டுமே வழங்குகிறது ஆனால் அமெரிக்கா 400 மில்லியன் டாலர்களை வழங்கி வருகிறது என்றும், தற்போது இந்த நிதியை கொண்டு இன்னும் பல அமைப்புகளை முன்னணி நிலைமைக்கு உயர்த்த அமெரிக்கா உறுதி பூண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் பாதித்த நோயாளிகளை உலகச் சுகாதார நிறுவனம் காப்பாற்றவில்லை என குற்றம்சாட்டும் பிரையன் அமெரிக்காவே அவர்களை காப்பாற்றுவதற்கான சுகாதார பணிகளை முன்னெடுத்தது என கூறியுள்ளார். அப்படி ஆப்பிரிக்கர்களை காப்பாற்றுவதற்காக நாங்கள் WHO மூலம் அவைகளை செய்யவில்லை, அமெரிக்காவே சுயமாக அதை செய்தது என அவர் கூறியுள்ளார். உலக சுகாதார நிறுவனத்திற்கு இதுவரை வழங்கி வந்த நிதியை தற்போது சர்வதேச அளவில் உள்ள செஞ்சிலுவை சங்கம் மற்றும் உலகெங்கிலும் உள்ள மருத்துவமனைகளுக்கு அந்நிதியை செலவிடுவோம் எனவும், சீனர்களால் கட்டுப்படுத்தப்படும் ஒரு ஊழல் நிறைந்த சர்வதேச அமைப்பின் மூலமாக நிதி வழங்க எங்களுக்கு விருப்பம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.