அமெரிக்‍க அதிபர் தேர்தலில் குடியரசுக்‍ கட்சி வேட்பாளர் Donald Trump-க்‍கு ஆதரவாக அந்நாட்டு மக்‍கள் வாக்‍களிக்‍க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாமல் ஜனநாயகக்‍ கட்சி வேட்பாளர் ஹிலரி கிளிண்டனுக்‍கு வாக்‍களித்தால் அணு ஆயுத ​போருக்‍கு தள்ளப்படுவார்கள் என்றும் ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினரும், ரஷ்ய லிபரல் ஜனநாயகக்‍ கட்சி தலைவருமான Vladimir Zhirinovsky குறிப்பிட்டுள்ளார்.

மேலும், டிரம்ப் அதிபரானால், அமெரிக்‍காவுக்‍கும், ரஷ்யாவுக்‍கும் இடையே இணக்‍கமான சூழல் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்‍க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 8-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதில் ஜனநாயகக்‍ கட்சி வேட்பாளராக போட்டியிடும் ஹிலரி கிளிண்டன், ரஷ்யாவுடன் டிரம்ப் நெருக்‍கம் காட்டுவதாக குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்த டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் விருப்பு வெறுப்பு இல்லையென தெரிவித்தார்.

இந்நிலையில், ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினரும், ரஷ்ய லிபரல் ஜனநாயகக்‍ கட்சித் தலைவருமான Vladimir Zhirinovsky செய்தி நிறுவனம் ஒன்றுக்‍கு நேற்று அளித்த சிறப்பு பேட்டியில், அமெரிக்‍க மக்‍கள் அணு ஆயுதப் போருக்‍கு தள்ளப்படாமல் இருக்‍க அந்நாட்டின் அதிபராக டிரம்ப்பை தேர்ந்தெடுக்‍க வேண்டும் என குறிப்பிட்டார். ரஷ்யாவுக்‍கும், அமெரிக்‍காவுக்‍கும் இடையிலான பதற்றத்தை தணிக்‍கக்‍கூடிய ஒரே நபர் டிரம்ப் என்றும் குறிப்பிட்டார். 

2005-ம் ஆண்டில் பெண்களை இழிவுப்படுத்தி டிரம்ப் பேசியிருப்பதாக கூறப்படுவது குறித்த கேள்விக்‍கு பதிலளித்த Zhirinovsky, சில நேரங்களில் மனிதர்கள் பேசுவதை வைத்து அவர்கள் அப்படித்தான் என்று எந்தவொரு முடிவுக்‍கும் வந்துவிடக்‍கூடாது என குறிப்பிட்டார்.

அமெரிக்‍க அதிபராக ஒபாமா 8 ஆண்டுகள் பதவியில் இருந்தும் உருப்படியாக எந்தவொரு செயலையும் செய்யவில்லை என Zhirinovsky குற்றம்சாட்டினார். ஹிலரி வெற்றி பெற்றால், அமெரிக்‍காவின் கடைசி அதிபராக அவர் இருப்பார் என்றும் குறிப்பிட்டார்.

டிரம்ப் அதிபரானால், ரஷ்யா-அமெரிக்‍கா இடையே இணக்‍கமான சூழல் ஏற்படும் என்றும், மனிதகுலத்திற்கு கொடையாக அமையும் என்றும் Zhirinovsky தெரிவித்தார். இந்நிலையில், டிரம்ப் மிகுந்த திறமைசாலி என ரஷ்ய அதிபர் புதின் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்‍கது.

இதனிடையே, பெண்களை இழிவுப்படுத்தி பேசியதற்காக டிரம்ப்புக்‍கு எதிராக பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நியூயார்க்‍ நகரில் உள்ள Trump Tower கட்டடத்திற்கு வெளியே திரண்ட பெண்கள், டிரம்புக்‍கு எதிரான வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி எதிர்ப்பு கோஷமிட்டனர். கொலம்பஸ் சர்க்‍கிள் பகுதியிலும் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.