தொட்டா முடிச்சுடுவோம்... வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை..!
வடகொரியா, அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் கடுமையான ராணுவ நடவடிக்கைகளை அந்நாடு எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் ஜிம் மாட்டீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலக நாடுகளின் கடுமையான எதிர்ப்புகளை மீறி வடகொரியா, தொடர்ச்சியாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால் அந்நாட்டின் மீது ஐநா பாதுகாப்பு சபை பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. எனினும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ச்சியாக அணு ஆயுத சோதனைகளையும் ஏவுகணை சோதனைகளையும் வடகொரியா நடத்திவருகிறது.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் அமெரிக்காவையும் அச்சுறுத்தும் வகையிலும் மிரட்டும் வகையிலும் ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.
இந்நிலையில், சியோல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் ஜிம் மட்டீஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, தவறு செய்யாதீர்கள், அமெரிக்கா மீதும் அதன் நட்பு நாடுகள் மீதும் ஏதாவது தாக்குதல் நடத்தினால், அது முறியடிக்கப்படும். அணு ஆயுதங்களை வடகொரியா பயன்படுத்தினால், கடுமையான ராணுவ நடவடிக்கைகள் மூலம் அது முறியடிக்கப்படும் என ஜிம் மட்டீஸ் வடகொரியாவை எச்சரித்தார்.
வடகொரியாவின் அத்துமீறிய அணு ஆயுத சோதனைகளால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவுகிறது.