பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்ககோரும் மசோதாவுக்கு ஆதரவு தர முடியாது. அதேசமயம், இந்தியாவுக்கு அச்சுறுத்தல் விளைக்கும் இடங்களில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்தால், அவர்களை அழிக்க பாகிஸ்தானுடன் இணைந்து செயலாற்றுவோம் என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மசோதா

காஷ்மீர் உரி ராணுவமுகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 வீரர்கள் பலியானார்கள். இதையடுத்து அமெரிக்காவில் ஆளும் ஜனநாயகக் கட்சி எம்.பி.யான டானா ரோஹ்ரா பாச்சர், குடியரசுக் கட்சி எம்.பி.யும், தீவிரவாதத்துக்கு எதிரான துணைக் குழுவின் தலைவருமான டெட் போ ஆகியோர் பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க கோரும் மசோதாவை அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில், கடந்தமாதம் 21-ந் தேதி தாக்கல் செய்தனர். ‘தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடு பாகிஸ்தான்’ என்ற பெயரில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

கையெழுத்து இயக்கம்

மேலும், இந்த மனுவுக்கு ஆதரவாக, அமெரிக்க இந்தியர்கள் நடத்தி வரும் கையெழுத்து இயக்கத்துக்கு இதுவரை 6 லட்சத்து 65 ஆயிரத்து 769 பேர் ஆதரவு அளித்துள்ளனர். ஆனால், இதுவரை அந்த மனு மீது அதிபர் ஒபாமா நிர்வாகம் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஆதரவில்லை

பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்க கோரி மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த மசோதாவுக்கு அமெரிக்க அரசு ஆதரவு தெரிவிக்காது.

இந்த மசோதாவில் எதையும் குறிப்பிட்டு பார்க்கவில்லை. இதற்கு ஆதரவாக செயல்பட மாட்டோம். ஒரு மசோதா நிலுவையில் இருக்கும் போது அது குறித்து கருத்தும் தெரிவிக்க இயலாது.

இணைந்து

பிராந்தியத்தில் பொதுவான அச்சுறுத்தல், சவால்கள் இருந்தாலும், அதை எதிர்த்து அதற்குரிய அரசுகளோடு இணைந்து அமெரிக்கா பணியாற்றும். தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பான இடங்களாக இருக்கும் பகுதிகளை அழிப்பதில் எப்போதும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளோடு நாங்கள் இணைந்து செயலாற்றுவோம். 

மாற்றமில்லை

காஷ்மீர் விஷயத்தில் எங்களின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை. இதில் உள்ள பிரச்சினையை இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சு மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும்.

காஷ்மீர் பிரச்சினை, இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் ஆகியவை குறித்து இருநாடுகளும் ஆக்கப்பூர்வமான பேச்சு நடத்த அமெரிக்க வலியுறுத்தியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே ஏராளமான கருத்து வேறுபாடுகள் இன்னமும் இருக்கின்றன. நாங்கள் முன்பு கூறியதைப்போல், அதை பேச்சு மூலமேதீர்த்துக்கொள்ள வேண்டும். எங்களுக்கும் பல நாடுகளுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன, அதை பேச்சு மூலமே தீர்த்து வருகிறோம்.

பாதுகாப்பு

அதேசமயம், பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதங்கள் தீவிரவாதிகள் வசம் சிக்காத அளவுக்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.