அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள வைரஸ் பரிசோதனை போல இந்தியா, சீனா போன்ற நாடுகளும் மேற்கொண்டால் அந்நாடுகளிலும் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். இதுவரை அமெரிக்கா 20 மில்லியன்  பரிசோதனைகளை செய்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது, இதுவரை 68 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதுவரை கிட்டதட்ட 3 லட்சத்து 98 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரசால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, பிரேசில் ரஷ்யா, ஸ்பெயின், பிரிட்டன், இந்தியா, இத்தாலி என பல்வேறு நாடுகள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 180 க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு  அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மிக தீவிரமாக உள்ளது. இதுவரை அங்கு மட்டும் சுமார் 19 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுவரை 1,11,394 பேர் உயிரிழந்துள்ளனர், சுமார்  7,38,729 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர் இன்னும் 11,15,789 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 17,121 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மொத்தத்தில் அமெரிக்காவில் 2 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, மற்ற எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து  வருவதால், அந்நாட்டு அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். வல்லரசு என சொல்லிக்கொள்ளும் அமெரிக்காவிலே இந்த நிலைமையா.? என பல நாடுகளும் அமெரிக்காவை விமர்சிக்கின்றன, இந்நிலையில் பல்வேறு வகையில் அதிபர் ட்ரம்ப் அதற்கு பதில் அளித்து வருகிறார், இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- அமெரிக்காவில் கொரோனா பரிசோதனை அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது, அதனாலேயே அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது.  சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி இந்தியா இதுவரை 45 லட்சம் பேருக்கு  கொரோனா பரிசோதனை செய்துள்ளது. 

மேலும் இப்பரிசோதனை அதிகப்படுத்தும் பட்சத்தில் இந்தியாவிலும் அதிக தொற்றுநோய்  இருப்பது தெரியவரும், இந்நிலையில் நான் அமெரிக்க மக்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், இந்தியா, சீனா போன்ற நாடுகளில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளும்போது அது தெரியவரும், அமெரிக்காவில் அதிக பரிசோதனை செய்யப்படுவதால் நோய்தொற்று எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளது. அதிகம் பேருக்கு பரிசோதனை செய்த காரணத்தினால் அமெரிக்கா மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப உள்ளது, இதுவரை யாரும் கற்பனையில் கூட நினைத்துப் பார்த்திராத  அளவுக்கு அமெரிக்காவின் பொருளாதாரம் மீண்டெழப் போகிறது, வேலைவாய்ப்பு வளர்ச்சி, பேசியவாறு மாதந்திர வேலைவாய்ப்புகள் அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இது முந்தைய எண்ணிக்கையைவிட கிட்டத்தட்ட  இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் என நினைக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.