America out from climate change agreement
பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது அமெரிக்கா….அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிப்பதைத் தடுக்கும், பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசுகையில், “பாரீஸ் பருவ நிலை மாறுபாட்டு ஒருதலைப்பட்சமாக இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தால் அமெரிக்காவில் தொழில் நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படுகின்றன. அமெரிக்கா கோடிக்கணக்கான டாலர்கள் தொகையை செலவழிக்கிறது. ஆனால் இந்தியா, சீனா போன்ற பிற நாடுகளே பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தால் பயனடைக்கின்றன.
பாரீஸ் ஒப்பந்தத்தால் 2020-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி இரட்டிப்பாகும். மேலும் நிலக்கரி சுரங்கங்களை கட்டுவதற்கும் சீனாவுக்கு பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் அமெரிக்கா எதையும் செய்ய முடியாது.
நான் அமெரிக்காவுக்கு பணிபுரிவதற்காகவே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். பாரீஸ் ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்காக அல்ல. அமெரிக்கா வரிசெலுத்தும் மக்களுக்கு நேர்மையாக நடந்து கொள்ள விரும்புகிறது.
அமெரிக்காவையும், அமெரிக்க மக்களையும் பாதுகாப்பதே என்னுடைய முதல் பணி. எனவே, அமெரிக்கா பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியது தொடர்பாக பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி ஆகிய நாடுகளின் அதிபர்களுக்கு தொலைபேசி வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ட்ரம்ப் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ட்ரம்ப்பின் இந்த முடிவுக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் உலக தலைவர்கள் பலர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
