குலைநடுங்க வைக்கும் கொரோனாவைரஸ்..... ஜூன் 30ம் தேதி வரை சீனாவுக்கு போக மாட்டோம்... ஏர் இந்தியா அறிவிப்பு
கொரோனாவைரஸ் காரணமாக, ஜூன் 30ம் தேதி வரை சீனா மற்றும் ஹாங்காங்குக்கு விமானங்களை இயக்க மாட்டோம் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
சீனாவில் கொரோனாவைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனாவைரசுக்கு 2 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகி உள்ளனர். மேலும் பல பத்தாயிரம் பேருக்கு கொரோனாவைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு அந்நாட்டு அரசு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவைரஸ் பரவுவதை தடுக்க சீனா கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் கொரோனாவைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது.
கொரோனாவைரஸ் பயம் காரணமாக சீனாவுக்கான விமான போக்குவரத்தை பல்வேறு நாடுகள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளன. நம் நாட்டின் ஏர் இந்தியா நிறுவனமும் அண்மையில் மார்ச் 28ம் தேதி வரை சீனாவுக்கான விமானங்களை தற்காலிகமாக ரத்து செய்வதாக அறிவித்தது. இந்நிலையில் சீனாவுக்கான விமான சேவையை ரத்து செய்ததை மேலும் 3 மாதங்களுக்கு ஏர் இந்தியா நீடித்துள்ளது.
சீனாவில் கொரோனாவைரஸ் இன்னும் கட்டுக்குள் வராததால், சீனாவுக்கான தனது விமான சேவையை ஜூன் 30ம் தேதி வரை மேலும் 3 மாதங்களுக்கு ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்துள்ளது. அதேபோல் ஷாங்காங் மற்றும் ஹாங்காங்குக்கான விமான சேவையையும் ஜூன் 30ம் தேதி வரை ஏர் இந்தியா ரத்து செய்துள்ளது. இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகிய தனியார் விமான சேவை நிறுவனங்கள் சீனா மற்றும் ஹாங்காங்குக்கான விமான சேவையை இம்மாதம் இறுதி வரை ரத்து செய்து இருந்தன. ஏர் இந்தியாவை தொடர்ந்து அந்த நிறுவனங்களும் விமான சேவை ரத்தை மேலும் நீடிக்குமா என்பது தெரியவில்லை.