ரஷ்யாவில் புற்றுநோய்க்கு தடுப்பு மருந்து கிடைப்பது குறித்து அசிர் ரஹ்மான் என்ற ரஷ்ய தமிழர் வெளியிட்ட வீடியோ கவனம் ஈர்த்துள்ளது.
சரளமாக தமிழ் பேசும் ரஷ்ய இளைஞர் அசிர் ரஹ்மான். Tamil in Russia என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்திருக்கிறார். முகநூலிலும் வீடியோள் போடுவார். அவை முழுவதும் தமிழில் இருக்கும். தற்போது ரஷ்யாவில் வசித்து வரும் இவர், அந்நாட்டின், கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, கலாச்சாரம் குறித்து பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து வருகிறார்.
அண்மையில் அவர் பதிவிட்ட வீடியோவில், ரஷ்யாவில் புற்றுநோய்க்கு மருந்து கிடைப்பது குறித்து பேசியது கவனம் ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில் அவர் புற்றுநோய்க்கான தடுப்பு மருந்து ரஷ்யாவில் கிடைப்பதாகவும், மேலும் அது குறித்த மற்ற தகவல்களையும் கூறியுள்ளார். இந்தப் பதிவில் அதைக் குறித்து காணலாம்.
புற்றுநோய் உயிரை பறிக்கும் கொடிய நோய் என்பது நாம் அறிந்ததே. இதற்கு எதிராக மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கும் வேளையில், ரஷ்யா புற்றுநோய்க்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாகவும், அது அந்நாட்டில் பயன்படுத்தப்படுவதாகவும் அசிர் கூறுகிறார். கடந்த 3 ஆண்டுகளாக இந்த மருந்தை ரஷ்யா ப்ரீ கிளினிக்கலாக பரிசோதித்தது. அதாவது சில விலங்குகளுக்கு செலுத்தி அதன் செயல்பாட்டை கண்காணித்துள்ளது. இப்போது நோய் பாதித்தவர்களுக்கு வழங்க தொடங்கியுள்ளது. இந்த மருந்து ரஷ்ய நோயாளிகளுக்கு மட்டுமே இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
கேன்சர் மருந்து
அண்மையில் பரவலாக பயன்படுத்தப்பட்ட COVID-19 தடுப்பூசிகள் மாதிரிதான் கேன்சருக்கு போடப்படும் இந்த தடுப்பூசியும் கூட. கேன்சரை கட்டுக்குள் கொண்டு வர இந்த வீரியமுள்ள தடுப்பூசிகள் ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்படுள்ளன. எண்டெரோமிக்ஸ் தடுப்பூசிகள் மெசஞ்சர் RNA (mRNA) என்ற தொழில்நுட்பம் அடிப்படையிலானது. இதன் மூலம், புற்றுநோய் செல்களை மட்டும் அடையாளம் கண்டு அழிக்க மனித உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு பயிற்சிவிக்கப்படும். இது அனைவருக்கும் ஒரே மாதிரியாக வழங்கும் தடுப்பூசி அல்ல. ஒவ்வொரு நோயாளியின் மரபணு, புற்றுநோய் கட்டியை ஆராய்ந்து அதற்கு ஏற்றபடி ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் 1 மணி நேரத்தில் வடிவமைக்கப்படும்.
இந்த தடுப்பூசிகள் கட்டியின் அளவைக் குறைக்க உதவுகின்றன. இந்த mRNA தடுப்பூசி மூலம் 60% முதல் 80% வரையில் புற்றுநோய் வளர்ச்சியை குறைக்கலாம். இதனால் ஆயுள்காலத்தை அதிகரிக்க முடியும். எண்டெரோமிக்ஸ் (Enteromix) வகை தடுப்பூசி புற்றுநோய்க்கு எதிரானது. இது நேரடியாக புற்றுநோய் செல்களை அழிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தடுப்பூசிகள் ரஷ்ய மக்களில் புற்றுநோய் பாதித்தவர்களுக்கு மட்டும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இதன் இந்திய மதிப்பு 3.12 லட்ச ரூபாயாகும்.
ஆனால் இவற்றை நோய் பாதித்தவர்களுக்கே வழங்குகிறார்கள்; முன்கூட்டியே கேன்சர் வராமல் தடுக்க வழங்குவதில்லை என அசிர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். அதாவது, கொரோனா நோய்த்தொற்று பாதிக்கும் முன் தற்காப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தியது போல இதை செலுத்துவதில்லை.
