அமெரிக்காவில் கட்டாய ஆங்கில மொழித் திறன் தேர்வில் தோல்வியடைந்ததால், 7,000க்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். வணிக ஓட்டுநர்கள் ஆங்கிலத்தில் பேசவும் புரிந்துகொள்ளவும் வேண்டும் என்ற புதிய விதி அமல்.
அமெரிக்காவில் கட்டாய ஆங்கில மொழித் திறன் தேர்வில் (English proficiency tests) தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டு 7,000க்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்திய லாரி ஓட்டுநர்கள் இயக்கிய வாகனங்களால் தொடர்ச்சியான சாலை விபத்துகள் நடந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த பணி நீக்க நடவடிக்கையால் அமெரிக்காவில் லாரி ஓட்டும் தொழிலில் உள்ள லட்சக்கணக்கான சீக்கியர்கள் உட்படப் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆங்கிலம் பேசத் தெரியாத லாரி ஓட்டுநர்கள்
பெடரல் மோட்டார் கேரியர் பாதுகாப்பு நிர்வாகத்தின் (FMCSA) தரவுகளின்படி, அக்டோபர் மாதம் வரை 7,248 லாரி ஓட்டுநர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என போக்குவரத்துச் செயலாளர் ஷான் டஃபி (Sean Duffy) தெரிவித்துள்ளார்.
ஜூலையில் 1,500 ஓட்டுநர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் இந்தியார்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வட அமெரிக்க பஞ்சாபி லாரி ஓட்டுநர்கள் சங்கத்தின்படி, அமெரிக்காவில் சுமார் 1,30,000 முதல் 1,50,000 வரையிலான லாரி ஓட்டுநர்கள் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
லாரி ஓட்டுநர்களுக்கு புதிய விதிமுறைகள்
"வணிக லாரி ஓட்டுநர்கள் வண்டியை இயக்க ஆங்கிலத்தில் பேசவும் புரிந்துகொள்ளவும் வேண்டும். இல்லையெனில் அவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள்," என்று போக்குவரத்துச் செயலாளர் டஃபி உறுதிபடத் தெரிவித்தார்.
பாரக் ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தபோது, மொழி மட்டுமே காரணமாகக் கூறி ஓட்டுநர்களைப் பணியிலிருந்து நீக்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. அந்த உத்தரவை டிரம்ப் நிர்வாகம் தளர்த்தியுள்ளது. இப்போது வந்துள்ள புதிய விதிமுறைகளால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகரித்த விதிமீறல்கள்
FMCSA-வின் தரவுத்தளத்தின்படி, அக்டோபர் வரை ஆங்கில மொழி திறன் தொடர்பாக 5,006 ஓட்டுநர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை சமீபத்திய மாதங்களில் உயர்ந்து வருகிறது.
பொதுமக்களுடன் பேசுவது, போக்குவரத்துச் சைகைகளைப் புரிந்துகொள்வது, அதிகாரிகளுடன் உரையாடுவது மற்றும் துல்லியமான பதிவுகளைப் பராமரிப்பது போன்றவற்றுக்கு போதுமான ஆங்கிலத் திறன்கள் வணிக ஓட்டுநர் உரிமம் (Commercial Driver’s Licence) வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்க வேண்டும் என்று புதிய விதி வலியுறுத்துகிறது.
போக்குவரத்துத் துறையின் அடுத்தடுத்த வழிகாட்டுதல்களின்படி, ஆங்கில மொழித் தேர்வில் தோல்வியடையும் ஓட்டுநர்கள் ஜூன் 25, 2025 முதல் உடனடியாகப் பணியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளது.
