இந்தியா, ரஷ்யா இணைந்து 6 உயர் சக்தி அணு உலைகள் கட்டமைப்பு; புடினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!!
இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து ஆறு உயர் சக்தி அணுசக்தி அலகுகளை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் பிரதமர் மோடியும், அதிபர் விளாடிமிர் புடினும் ஈடுபட்டனர்.
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று காலை டெல்லியில் இருந்து ரஷ்யா தலைநகர் மாஸ்கோ புறப்பட்டுச் சென்றார். நேற்று இரவு மோடிக்கு விளாடிமிர் புடின் இரவு விருந்து அளித்து இருந்தார். இதைத் தொடர்ந்து இருதரப்புகளிலும் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.
இரண்டு தலைவர்களும் மாஸ்கோவில் இருக்கும் ஆல் ரஷ்யன் எக்சிபிஷன் மையத்தை இன்று பார்வையிட்டனர். இந்த மையம் நவம்பர் 2023- ல் திறக்கப்பட்டது, இது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் வரலாற்றில் மிகப்பெரிய கண்காட்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அணுசக்தி துறையில் இந்தியா-ரஷ்யா ஒத்துழைப்பு தொடர்பான புகைப்படங்களை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
இத்துடன், இந்தியாவின் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முக்கிய பகுதியாக கருதப்படும் VVER-1000 அணு உலைக்கான நிரந்தர மாதிரியான "Atomic Symphony"யும் பிரதமருக்கு காண்பிக்கப்பட்டது.
இதன் நீட்சியாக இரண்டு தலைவர்களும் கிரம்ப்ளின் மாளிகையில் நடத்திய பேச்சுவார்த்தையில், இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து ஆறு உயர் சக்தி அணுசக்தி அலகுகளை உருவாக்குவது மற்றும் இந்தியாவில் குறைந்த ஆற்றல் கொண்ட அணுமின் நிலையங்களை உருவாக்குவது என்று ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உக்ரைன் போர் துவங்கிய பின்னர் முதன் முறையாக மோடி, புடின் சந்திப்பு நடந்துள்ளது.
''கடந்த 40-50 ஆண்டுகளாக இந்தியா தீவிரவாதத்தை எதிர்கொண்டு வருகிறது. இது எவ்வளவு மோசமாக இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்க வேண்டும். தீவிரவாதம் எங்கு நடந்தாலும் சரி, அது மாஸ்கோவாக இருக்கட்டும், தாஜெஸ்தான் ஆக இருக்கட்டும், அப்போதெல்லாம் மனது மிகவும் வலிக்கிறது. போர் காரணமாக குழந்தைகள் உயிர் பலியாவது மிகவும் வலியைக் கொடுக்கிறது. அனைத்து வகையிலான தீவிரவாதத்தையும் நாங்கள் கண்டிக்கிறோம். கடந்த 25 ஆண்டுகளாக நான் ரஷ்யாவுடன் உறவில் இருக்கிறேன். கடந்த பத்து ஆண்டுகளில் 17 முறை சந்தித்து இருக்கிறோம். கடந்த 25 ஆண்டுகளில் நாங்கள் கிட்டத்தட்ட 22 இருதரப்பு சந்திப்புகளை நடத்தியுள்ளோம். இதுவே நமது உறவுகளின் ஆழத்தை பிரதிபலிக்கிறது.
"கடந்த 5 ஆண்டுகள் முழு உலகிற்கும், முழு மனிதகுலத்திற்கும் மிகவும் சவாலானதாக இருந்தது. நாங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருந்தது. முதலில், கோவிட், பின்னர் மனித குலத்திற்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டது. உலகமே உணவு, எரிபொருள், உரம் கிடைக்காமல் நெருக்கடியை சந்தித்து வந்தன. இந்தியா-ரஷ்யா நட்புறவு மற்றும் ஒத்துழைப்பால் எனது நாட்டு விவசாயிகளை நான் கைவிடவில்லை'' என்று பிரதமர் மோடி பேசினார்.