சவுதி அரேபியாவில் மெக்கா-மதீனா புனித யாத்திரை சென்ற இந்திய பக்தர்கள் பேருந்து விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இந்த விபத்தில், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் பலியாகியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
புனித மெக்கா–மதீனா யாத்திரைக்கு சென்ற இந்திய பக்தர்கள் பேருந்து விபத்தில் பலர் உயிரிழந்ததால், ஆந்திரா–தெலங்கானா மாநிலத்தில் பெரும் துயரம் நிலவுகிறது. யாத்திரையிலிருந்து உறவினர்களை இழந்த குடும்பங்கள் அதிர்ச்சியில் உள்ளன. இந்த விபத்தில் குறிப்பாக ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் உயிரிழந்துள்ளதாக தொடக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேருந்து டீசல் டேங்கருடன் மோதல்
பத்ர்–மதீனா நெடுஞ்சாலையில் பயணித்த இந்திய பக்தர்கள் இருந்த பேருந்து, எதிரே வந்த டீசல் டேங்கரை மோதி உடனே பெரும் வெடிவிபத்து ஏற்பட்டது. பயணிகள் பெரும்பாலும் அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்ததால், தப்பித்துக் கொள்ள மிகவும் குறைந்த நேரம்தான் கிடைத்தது. 42 பயணிகளில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
தெலங்கானா முதலமைச்சர் இரங்கல்
சவுதி விபத்தில் உயிரிழந்த ஹைதராபாத் மக்களுக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆழ்ந்தார் இரங்கலை தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை உடனடியாக சேகரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
உதவி எண்கள் அறிவிப்பு
மாநில அரசு ஹைதராபாத் மற்றும் பல நகரங்களில் அவசர கட்டுப்பாட்டு அறைகள் திறந்து, உறவினர்கள் தொடர்பு கொள்ள உதவி எண்களை வெளியிட்டுள்ளது. குடும்பங்களுக்கு தேவையான தகவல்களை வழங்கும் தனிப்பிரிவு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சவுதி அதிகாரிகளின் ஒருங்கிணைப்பு
ரியாத் மற்றும் ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரக குழுக்கள், உயிரிழந்தவர்கள் விபரங்களை உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பயணத்தில் எத்தனை இந்தியர்கள் இறந்தனர், அவர்கள் எந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.
அடையாளம் காணப்பட்ட இந்தியர்களின் பெயர்கள்
அப்துல் முகமது, முகமது மௌலானா, சோஹைல் முகமது, மஸ்தான் முகமது, பர்வீன் பேகம், ஜகியா பேகம், ஷோகத் பேகம், ஃபர்ஹீன் பேகம், ஜஹீன் பேகம், முகமது மன்சூர், முகமது அலி, கௌசியா பேகம் உள்ளிட்ட பலரின் அடையாளம் உறுதியானதாக கூறப்படுகிறது. இவர்களில் பலர் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இந்திய அரசின் விரைவான நடவடிக்கை
இந்த சோகமான சம்பவத்திற்கு உடனடி கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய முழுமையான அறிக்கையைத் தயாரிக்க சவுதி அதிகாரிகளுடன் இணைந்து விரைவு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்திய யாத்ரீகர்களின் பாதுகாப்பு மற்றும் மீட்பு முயற்சிகள் தொடர் கவனத்தில் உள்ளன.
