10வது முறை பீகார் முதல்வராகும் நிதிஷ் குமார்! அமைச்சரவைக்கு ஓகே சொன்ன அமித் ஷா!
பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, நிதிஷ் குமார் பத்தாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

பீகாரின் புதிய முதல்வர் யார்?
பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியும் (பா.ஜ.க) தேசிய ஜனநாயகக் கூட்டணியும் (NDA) மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதையடுத்து, நிதிஷ் குமார் மீண்டும் முதலமைச்சர் பொறுப்பைத் தக்கவைத்துக் கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய அமைச்சரவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் இறுதி செய்யப்பட்ட நிலையில், அடுத்த மூன்று நாட்களுக்குள் புதிய அரசு அமையும் எனத் தெரிகிறது.
பத்தாவது முறை முதலமைச்சர்
பீகாரில் என்.டி.ஏ அரசின் பதவியேற்பு விழா புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுதித் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் வருகையைப் பொறுத்து அமையும்.
நிதிஷ் குமார் இந்த முறை முதல்வராகப் பதவியேற்கும்போது, பத்தாவது முறையாக பீகார் மாநில முதலமைச்சராகப் பதவியேற்ற சாதனையைப் படைப்பார்.
கூட்டணியின் அபார வெற்றி
பீகார் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரண்டு கட்சிகளும் 2020ஆம் ஆண்டுத் தேர்தலை விட அதிக இடங்களைப் பெற்றுள்ளன.
பா.ஜ.க 89 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஜே.டி.யு. 85 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
இவர்களுடன் கூட்டணியில் உள்ள லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்), ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (HAM) மற்றும் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (RLM) போன்ற சிறிய கூட்டணிக் கட்சிகளும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன.
அடுத்த கட்ட நடவடிக்கைகள்
18வது பீகார் சட்டமன்றம் அமைவதற்கான அறிவிப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகும எனத் தெரிகிறது. முதலமைச்சர் நிதிஷ் குமார் நாளை (திங்கட்கிழமை) அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில், 17வது சட்டமன்றத்தைக் கலைக்கும் தீர்மானம் அங்கீகரிக்கப்படும். தீர்மானம் நிறைவேறியவுடன், நிதிஷ் குமார் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஆரிப் முகமது கானிடம் சமர்ப்பித்து, அடுத்த அரசாங்கத்திற்கு வழிவகுப்பார்.
இதைத் தொடர்ந்து, என்.டி.ஏ. கூட்டணி அதன் சட்டமன்றக் கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தி, கூட்டணியின் தலைவரைத் தேர்ந்தெடுத்து, அடுத்த அரசாங்கத்தை அமைக்க உரிமை கோரும்.