பாகிஸ்தானின்  70 ஆவது சுதந்திர தினத்தையொட்டி அந்நாட்டு ராணுவம், வாகா எல்லையில் 400 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றியது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் அட்டாரியில் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் கடந்த ஆண்டு நாட்டிலேயே மிகப் பெரியதாகக் கருதப்படும் மூவர்ணக்கொடி, மிக உயரமான கம்பத்தில் ஏற்றிவைக்கப்பட்டது.

120 அடி நீளமும், 80 அடி அகலமும் கொண்ட அந்தத் தேசியக்கொடியை பஞ்சாப் மாநில அமைச்சர் அனில் ஜோஷி  கடந்த மார்ச் மாதம் ஏற்றிவைத்தார். 110 மீட்டர்  உயரமுள்ள கம்பத்தில், இந்தக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

பலத்த காற்று காரணமாக இந்த கொடி ஏற்றப்பட்டதில் இருந்து 4 முறை கிழிந்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானில் நேற்று 70–வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அட்டாரி–வாகா எல்லையில் 120 அடி உயரம் 80 அடி அகலம் கொண்ட தேசிய கொடியை, 400 அடி உயர கொடிக்கம்பத்தில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜாவீது பாஜ்வா ஏற்றிவைத்தார்.

இந்த கொடி பாகிஸ்தான் வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய தேசிய கொடியாக கருதப்படுகிறது. தெற்கு ஆசியாவிலேயே அதிக உயரத்தில் பறக்கவிடப்பட்டுள்ள கொடி இதுவென கருதப்படுகிறது. உலக அளவில் அதிக உயரத்தில் பறக்கும் 8–வது தேசியக் கொடியாகும்.