நைஜீரியாவில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 276 மாணவிகளில் 21 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களும் விடுவிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இவர்கள் அங்கு ஒரு குறிப்பிட்ட மதத்தின் அடிப்படையிலான ஆட்சியை அமைப்பதற்காக ஆயுதம் ஏந்தி போராடி வருகிறார்கள். மேற்கத்திய கல்வி முறையை அவர்கள் தீவிரமாக எதிர்த்து வருகிறார்கள்.

இதையொட்டி கடந்த 2010ம் ஆண்டில் இருந்து பள்ளிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகளை கொடூரமாக கொலை செய்துள்ளார்கள்.

இதை தொடர்ந்து, டந்த 2014ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 14ம் தேதி போர்னோ மாகாணத்தில் சிபோக் நகரில் உள்ள பள்ளிக்குள் புகுந்த, போகோஹரம் தீவிரவாதிகள் அங்கிருந்து 276 மாணவிகளை கடத்தி சென்றனர்.

அடுத்த சில மாதங்களில் 57 மாணவிகள் அவர்கள் பிடியில் இருந்து தப்பினர். ஆனாலும் மற்ற மாணவிகளின் கதி என்ன ஆனது என மிகப்பெரிய கேள்வியை எழுப்பியது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாணவிகளை விடுவிப்பது தொடர்பாக செஞ்சிலுவை சங்கம் மற்றும் சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் ஏற்பாட்டில் போகோஹரம் தீவிரவாதிகளுக்கும், நைஜீரிய அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

இந்நிலையில் நேற்று 21 மாணவிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 4 போகோஹரம் தீவிரவாதிகளை விடுவித்து, இந்த மாணவிகள் விடுதலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. விடுவிக்கப்பட்ட மாணவிகள் கும்ஷே என்ற இடத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் போர்னோ மாகாணத்தின் தலைநகரான மைதுகுரிக்கு அழைத்து வரப்பட்டனர். 

அந்த நாட்டின் தகவல் துறை அமைச்சர் லாய்முகமது, 4 போகோஹரம் தீவிரவாதிகளை விடுவித்துத்தான் 21 மாணவிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்ற தகவலை மறுத்தார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘கடுமையான பேச்சுவார்த்தையினாலும், இரு தரப்பிலும் ஏற்பட்டுள்ள பரஸ்பர நம்பிக்கையினாலும்தான் மாணவிகள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். 21 மாணவிகள் விடுவிக்கப்பட்டிருப்பது புதிய திருப்பமாக அமைந்துள்ளது.

போகோஹரம் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள பிற மாணவிகளும் விடுவிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இது முதல் படி. இது பிற அனைத்து மாணவிகளும் விடுவிக்கப்படுவதற்கு ஒரு திருப்பமாக உதவும்’’ என்றார்.