2025 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு, ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 'சாடான்டாங்கோ' போன்ற அவரது படைப்புகள் உலகளவில் புகழ்பெற்றவை.

2025 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்க்கு (László Krasznahorkai) வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தின் அழிவுக்கு நடுவில், கலையின் சக்தியை மீண்டும் உறுதிப்படுத்தும் அவரது தொலைநோக்கு மிக்க படைப்புகளுக்காக அவருக்கு இந்த உயரிய விருது வழங்கப்படுவதாக நோபல் பரிசு அகாடமி அறிவித்துள்ளது.

லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்

லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய், ஹங்கேரியின் மிக முக்கியமான சமகால எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவரது படைப்புகள் மனிதனின் இருத்தலியல் போராட்டங்கள், உலகின் முடிவைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் குறித்து ஆழமாக ஆராய்பவை. நீண்ட, சிக்கலான வாக்கிய அமைப்புகள் கொண்ட லாஸ்லோவின் எழுத்துகள் மிகவும் புகழ்பெற்றவை.

உலகளவில் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற 'சாடான்டாங்கோ' (Satantangó), 'தி மெலன்கலி ஆஃப் ரெசிஸ்டன்ஸ்' (The Melancholy of Resistance) ஆகியவை லாஸ்லோவின் குறிப்பிடத்தக்க படைப்புகள். இந்த நாவல்களை இயக்குநர் பேலா டார் (Béla Tarr) திரைப்படங்களாகவும் எடுத்திருக்கிறார். அவை சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளன.

Scroll to load tweet…

நோபல் கமிட்டியின் பாராட்டு

கிராஸ்னாஹோர்காயின் எழுத்து, நம்பிக்கையற்ற இருண்ட சூழல்களுக்கு மத்தியிலும், மனித உணர்வுகளின் சிக்கலையும், கலையின் ஆழமான, நிரந்தரமான தாக்கத்தையும் வெளிப்படுத்துவதாக நோபல் கமிட்டி குறிப்பிட்டுள்ளது.

இலக்கிய நோபல் பரிசு பெற்ற 122 ஆவது நபராக லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய் திகழ்கிறார். அவருக்குப் பரிசின் ரொக்கத் தொகையாக 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் (இந்திய மதிப்பில் சுமார் 10.3 கோடி ரூபாய்) வழங்கப்படும்.

நோபல் பரிசுகள், ஆல்பிரட் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10 அன்று ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளன.