2025 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு, சுசுமு கிடகா, ரிச்சர்ட் ராப்சன், மற்றும் ஓமர் எம். யாகி ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது. MOFs என்ற புதிய மூலக்கூறு கட்டமைப்பை உருவாக்கியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு, ஜப்பானிய விஞ்ஞானி சுசுமு கிடகா (Susumu Kitagawa), ஆஸ்திரேலிய விஞ்ஞானி ரிச்சர்ட் ராப்சன் (Richard Robson), மற்றும் அமெரிக்க விஞ்ஞானி ஓமர் எம். யாகி (Omar M. Yaghi) ஆகிய மூவருக்கும் கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலோக–ஆர்கானிக் கட்டமைப்புகள் (Metal-Organic Frameworks - MOFs) என்ற மூலக்கூறு கட்டமைப்புகளை உருவாக்கியதற்காக இந்த உயரிய விருது அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
புதிய மூலக்கூறு கட்டமைப்பு
ஸ்வீடனின் ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி வெளியிட்ட அறிக்கையில், இந்த மூன்று விஞ்ஞானிகளும் ஒரு புதிய வகை மூலக்கூறு கட்டிடக்கலையை (molecular architecture) உருவாக்கியுள்ளனர். "அவர்கள் உருவாக்கிய உலோக-ஆர்கானிக் கட்டமைப்புகள் (MOFs), மூலக்கூறுகள் உள்ளேயும் வெளியேயும் பாய்ந்து செல்லக்கூடிய பெரிய குழிவுகளைக் கொண்டுள்ளன. ஆராய்ச்சியாளர்கள் இவற்றை பயன்படுத்தி, பாலைவனக் காற்றிலிருந்து நீரை அறுவடை செய்யவும், நீரிலிருந்து மாசுபடுத்திகளைப் பிரித்தெடுக்கவும், கார்பன் டை ஆக்சைடைப் பிடிக்கவும், ஹைட்ரஜனை சேமிக்கவும் பயன்படுத்தி வருகின்றனர்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உலோக-ஆர்கானிக் கட்டமைப்புகள் வேதியியலாளர்களுக்கு அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் சிலவற்றிற்குத் தீர்வு காணும் புதிய வாய்ப்புகளை வழங்கியுள்ளது என்று நோபல் குழு கூறியுள்ளது.
ஜப்பானின் கியோட்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுசுமு கிடகா, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரிச்சர்ட் ராப்சன், மற்றும் அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஓமர் எம். யாகி ஆகிய மூவருக்கும் நோபல் பரிசின் பரிசுத் தொகையானது சமமாகப் பிரித்து வழங்கப்படும்.
முந்தைய ஆண்டின் வேதியியல் நோபல் பரிசு
கடந்த ஆண்டு (2024), வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு வழங்கப்பட்டது. அவர்களில் டேவிட் பேக்கர் அவர்களுக்குப் பரிசுத் தொகையின் ஒரு பாதியும், டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் எம். ஜம்பர் ஆகியோருக்கு மீதமுள்ள பாதித் தொகையும் பகிர்ந்து வழங்கப்பட்டது.
கணினி மூலம் புரதத்தை வடிவமைத்ததற்கான (computational protein design) பங்களிப்பிற்காக பேக்கர் அவர்களுக்கும், புரத கட்டமைப்பை முன்னறிவித்ததற்கான (protein structure prediction) பங்களிப்பிற்காக ஹசாபிஸ் மற்றும் ஜம்பர் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
