20 crores penalty for fishermen

இலங்கை நாடாளுமன்றத்தில் கடல் தொழில் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் எல்லை தாண்டி மீன் பிடித்தால், ரூ.2 கோடி முதல் ரூ.20 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதனால், தமிழக மீனவர்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் எல்லை தாண்டி மீன் பிடிக்க தடை விதித்து, அந்நாட்டி மீன் வளத்துறை அமைச்சர் மசோதா தாக்கல் செய்தார். கடந்த 6 மாதமாக இந்த மசோதா நிலுவையில் இருந்து வந்தது. இதைதொடர்ந்து இன்று இலங்கை நாடாளுமன்ற கூட்டம் கூடியது. அப்போது, கடல் தொழில் சட்ட திருத்த மசோதா ஏற்கப்பட்டது.

இலங்கை அரசு நிறைவேற்றியுள்ள இந்த மசோதா தமிழக மீனவர்களுக்கு எதிரானதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும், இந்த மசோதாவில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தினால், மீனவர்கள் மீது அதிகப்பட்ச தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, எதிர்க்கட்சிகள் இலங்கை நாடாளுமன்றத்தில் வாதம் செய்து வருகின்றனர்.

கடலில் மீன் பிடிக்கும் மீனவர்கள் இரட்டை வலையை பயன்படுத்த இலங்கை அரசு தடை விதித்துள்ளது. ஆனால், இந்திய மீனவர்களுக்கு அதுபோன்ற தடை இதுவரை பிறப்பிக்கவில்லை. இதனால், தமிழக மீனவர்கள் எல்லை பகுதியில் மீன் பிடிக்கும்போது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகிறார்கள் என கூறப்படுகிறது.

கடந்த காலங்களில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள், விடுவிக்கப்பட்டனர். ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் 153 படகுகளை இலங்கை அரசு பறிமுதல் செய்துள்ளது. இதனை இதுவரை மத்திய அரசு மீட்பதற்கான எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதேபோல் கடந்த முறை பாஜக ஆட்சியில் இருந்தபோது 98 படகுகள், இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு, கடலில் வீணாக மூழ்கியது என தமிழக மீனவர்கள் தரப்பில் கூறுகின்றனர்.

மேலும், கடந்த 2 மாதங்களில் 53 தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை. இலங்கைக்கு சென்ற, இந்திய பிரதமர் மோடியும் இதுபற்றி எவ்வித பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை.

இந்தியா – இலங்கை அரசுகள் இதுவரை எவ்வித சுமுக பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை. இதனால், தமிழக மீனவர்கள் 600 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை நாடாளுமன்றத்தில் கடல் தொழில் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், தமிழக மீனவர்கள் கடலில் கால் வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் உள்நாட்டு போர் நடந்தபோது, தமிழக மீனவர்கள் எல்லை தாண்டவில்லை. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்கு, கச்சத் தீவு பிரச்சனை முறைப்படுத்தி மீட்க வேண்டும் என தமிழக மீனவ அமைப்பினர் கூறுகின்றனர்.

அதே நேரத்தில், இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கடல் தொழில் சட்ட திருத்த மசோதாவுக்கு, இலங்கை மீனவர்களும், மீனவ அமைப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த மசோதா தாக்கல் செய்ததன் மூலம், அன்னிய நாட்டு கப்பல்கள், இலங்கை எல்லையில் நுழைய முடியாது என கூறுகின்றனர்.