உக்ரைனுடனான போரில் 14,000 ரஷ்ய வீரர்கள் பலி... உக்ரைன் ராணுவம் தகவல்!!
உக்ரைனுடனான போரில் இதுவரை 14 ஆயிரம் ரஷ்ய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைனுடனான போரில் இதுவரை 14 ஆயிரம் ரஷ்ய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது கடந்த 24 ஆம் தேதி முதல் ரஷ்யா ராணுவம் கொடூரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீது கடந்த மாதம் 24 ஆம் தேதி படையெடுத்த ரஷ்யா, அங்கு மூன்று வாரங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்தியது. மேலும் மருத்துவமனைகள், அரசு கட்டிடங்கள், காவல்நிலையங்கள் என பல முக்கிய கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் பல கட்டிடங்கள் உருகுலைந்தன. உக்ரைனின் கிழக்கு பகுதியில் இருக்கும் சில பிராந்தியங்களில் அந்நாடு இனப்படுகொலையை நடத்தி வருவதாக கூறி, இந்த ராணுவ நடவடிக்கையை ரஷ்யா மேற்கொண்டுள்ளது.
இந்த தொடர் தாக்குதலில் உக்ரைனில் இருக்கும் பல முக்கிய நகரங்கள் உருக்குலைந்து போயிருக்கின்றன. அண்மையில் மகப்பேறு மருத்துவ மனை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் பல நகரங்கள் ரஷ்யாவின் தாக்குதலுக்கு வீழ்ந்துள்ளன. உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் ஏராளமான மக்கள் உணவு, தண்ணீர் இன்றி தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ரஷ்ய படைகளால் அந்த நகரம் முற்றுகையிட்டுள்ளது. மரியுபோலில் மட்டும் இதுவரை 2,200 அப்பாவி மக்களை ரஷ்ய ராணுவம் கொன்றுள்ளதாக கூறப்படுகிறது.
ரஷ்ய படைக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் ரஷ்ய படை தலைநகர் கிவ்வுக்குள் முழு பலத்துடன் செல்ல முடியாமல் திணறி வருகிறது. இதனால் சில நாட்களாகவே கீவ் நகரில் தாக்குதல் கடுமையாக்கப்பட்டு இருக்கின்றன. இதனிடையே, உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளை உடனே நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்நிலையில், உக்ரைன் ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் இதுவரை 14 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்று உக்ரைன் ராணுவ தலைமை தளபதி தெரிவித்துள்ளார்.